மே.இ.தீவுகள் மிரட்டல் வெற்றி; 19 ரன்களுக்கு 6 விக்கெட்; ரஸல் காட்டடி: மெக்காய், வால்ஷ் பந்துவீச்சில் சரிந்தது ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர் மெக்காய் | படம் உதவி: ட்விட்டர்.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர் மெக்காய் | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
3 min read

ரஸலின் காட்டடி ஆட்டம், மெக்காய், வால்ஷ் ஜூனியரின் பந்துவீச்சு ஆகியவற்றால் செயின் லூசியாவில் நேற்று நடந்த முதலாவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மே.இ.தீவுகள் அணி.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது. 146 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் மே.இ.தீவுகள் முன்னணியில் இருக்கிறது. அபாரமாகப் பந்துவீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மே.இ.தீவுகள் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மெக்காய் ஆட்டநாயகன் விருது பெற்றார். சுழற்பந்துவீச்சாளர் வால்ஷ் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவரும்தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் அசத்திய வேகப்பந்துவீச்சாளர் இந்த ஆட்டத்திலும் பந்துவீச்சில் பல்வேறு வேறுபாடுகளை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை முதுகெலும்பை உடைத்தெறிந்தார்.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய வால்ஷ் ஜூனியர்
3 விக்கெட்டுகளை வீழ்த்திய வால்ஷ் ஜூனியர்

ஐபிஎல் டி20 போட்டி போல அதிரடியாக பேட் செய்த ஆன்ட்ரூ ரஸல், 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சர்வதேச டி20 போட்டியில் ரஸல் தனது முதலாவது அரை சதத்தை அடித்தார். இதில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.

89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி வலுவாகத்தான் இருந்தது. வெற்றிக்கு 56 ரன்கள் தேவை, கைவசம் 12 ஓவர்கள் இருந்தன. ஆனால், அதன்பின் வால்ஷ், மெக்காய் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் பின்வரிசை வீரர்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்தனர்.

ஒரு கட்டத்தில் 13 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 38 ரன்களுக்குள் மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. அதிலும் கடைசி 19 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி பறிகொடுத்தது மிகப்பெரிய “பேட்டிங் கொலாப்ஸ்” என்றுதான் கூற முடியும்.

அரை சதம் அடித்த ரஸல்
அரை சதம் அடித்த ரஸல்

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்ஷெல் மார்ஷ் 51 ரன்களும், மாத்யூ வேட் 33 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

ஆஸ்திரேலிய அணியில் ஆறுதலான விஷயம் ஜோஸ் ஹேசல்வுட்டின் பந்துவீச்சாகும். 4 ஓவர்கள் வீசிய ஹேசல்வுட் ஒரு மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் 18 டாட் பந்துகளாகும். ரஸல், கெயில், லூயிஸ் ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் ஹேசல்வுட்தான். மற்றவகையில் ஸ்டார்க், அகர், ஸம்ப்பா, கிறிஸ்டியன் ஆகியோரின் பந்துவீச்சு எடுபடவில்லை. மார்ஷ் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மே.இ.தீவுகள் வீரர்கள் லூயிஸ், சிம்மன்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். லூயிஸ் டக் அவுட்டில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கெயில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் அகரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

3-வது வீரராக களமிறங்கிய ஹெட்மயர், சிம்மன்ஸுடன் சேர்ந்து பேட் செய்தார். சிம்மன்ஸ் அவ்வப்போது சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். நீண்ட நேரம் நிலைக்காத சிம்மன்ஸ் 27 ரன்களில் (2 சிக்ஸர், 2 பவுண்டரி) மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

4-வதாகக் களமிறங்கிய பூரன், ஹெட்மயருடன் சேர்ந்தார். இருவரும் ஸ்கோரை உயர்த்தும் வகையில் ரன்களை வேகமாகச் சேர்த்தனர். 17 ரன்கள் சேர்த்தநிலையில் பூரன் ரன் அவுட் ஆனார். அடுத்துக் களமிறங்கிய ரஸல், ஹெட்மயருடன் சேர்ந்தார்.

ரஸலுக்கு ஒத்துழைத்து ஹெட்மயர் ஆடினார். வழக்கமான தனது காட்டடி ஆட்டத்தை ரஸல் வெளிப்படுத்தி ஸ்டார்க், அகர் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். ஹெட்மயர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ரஸல் 26 பந்துகளில் தனது சர்வதேச டி20 போட்டியில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேசல்வுட்டின் பந்துவீச்சில் ரஸல் போல்டானார். ஆலன் 8 ரன்னிலும், பிராவோ 7 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது. ஆஸி. தரப்பில் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும், மார்ஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in