#INDvsSL கரோனாவால் தள்ளிவைப்பு: இந்தியா-இலங்கை ஒருநாள்,டி20 தொடர் தேதி மாற்றம்

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல்திராவிட், கேப்டன் ஷிகர் தவண் | படம் உதவி ட்விட்டர்
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல்திராவிட், கேப்டன் ஷிகர் தவண் | படம் உதவி ட்விட்டர்
Updated on
2 min read


இலங்கை அணியின் பயிற்சியாளர், டேட்டா அனலிஸ்ட் ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள், டி20 தொடர் தொடங்கும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 13ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குவதாக இருந்த நிலையில் அது 17-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

இங்கிலாந்துக்குப் பயணம் செய்த இலங்கை அணி அந்நாட்டுடன் ஒருநாள் தொடர், டி20 தொடரி்ல் விளையாடி நாடு திரும்பியது. இலங்கை அணி தாயகம் திரும்பிய சில நாட்களில் இங்கிலாந்து அணியில் உள்ள 3 வீரர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, இலங்கை வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர், டேட்டா அனலிஸ்ட் டி நிரோஷன் ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் வீரர்களுக்கு வழக்கமான தனிமைப்படுத்தும் காலத்தை கூடுதலாக 3 நாட்கள் நீடித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதன் காரணமாக வேறு வழியின்றி இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள், டி20 தொடர் தொடங்கும் தேதியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ இலங்கை அணியில் இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 13ம் தேதிக்குப் பதிலாக 17ம் தேதி தொடங்கும். வீரர்களின் பாதுகாப்பு, உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். ஆனால், இரு நாட்டு வாரியங்களும் இன்னும் தேதிகளை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதனால் முதல் ஒருநாள் போட்டி 17ம் தேதி 2-வது போட்டி 19 மற்றும் 3-வது போட்டி 21 ஆகிய நாட்களில் நடக்கும். டி20 போட்டிகள் வரும் 24ம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிகிறது

இது தொடர்பாக பிசிசிஐ வாரியத்துடன் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்
ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 13 முதல்ஒருநாள் போட்டி, 16 மற்றும் 18ம் தேதிகளில் அடுத்த இரு போட்டிகளும் நடத்தப்பட இருந்தன. டி20 போட்டிகள் ஜூலை 21, 23, 25ம் தேதிகளில் நடத்தப்பட திட்டமிடப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in