

ஒவ்வொரு முறையும் ஓய்வு குறித்த தர்மசங்கடமான கேள்விகளை தனக்கேயுரிய நகைச்சுவையுடன் எதிர்கொள்ளும் தோனி மீண்டும் ஒரு முறை அத்தகைய கேள்வியை அதே நகைச்சுவை மாறா தன்மையுடன் எதிர்கொண்டார்.
அன்று இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டி முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் மீண்டும் ஒரு முறை அவரிடம், தனது சொந்த மண்ணில் கடைசி போட்டியில் விளையாடினீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, “ஏன்? நான் உடற்தகுதி இல்லாதவனாக உங்களுக்கு தெரிகிறேனா? நான் இன்னமும் வேகமாக ஓடுகிறேன்.
என்னால் முடிந்த அளவுக்கு அனைத்தையும் வேகமாக செய்கிறேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கு வேறு அளவுகோல் உள்ளது. நீங்கள் கூறலாம், “நான் சிக்சர்கள் அடிப்பதில்லை, அதனால் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என்று கருதலாம். ஆனால் அடுத்த போட்டியிலேயே சில சிக்சர்களை நான் அடித்தாலும் கூட நீங்கள் என்னை முடிக்காமல் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே” என்றார்.
மேலும் இப்போதெல்லாம் ஹெலிகாப்டர் ஷாட்களை பார்க்க முடிவதில்லையே என்று கேட்டதற்கு, “ஹெலிகாப்டர் பறப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடம் தேவை. நீங்கள் நீருக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலில் சென்று கொண்டிருக்கும் போது ஹெலிகாப்டர் இல்லையா என்று கேட்டால் அது பிரச்சினைதான். ஹெலிகாப்டர் ஷாட் என்பது ஒரு குறிப்பிட்ட வகை பந்துக்குரியது.
பவுன்சர் வீசும் போது நான் ஸ்டூல் போட்டுக்கொண்டுதான் ஹெலிகாப்டர் ஷாட் ஆட முடியும். இப்போதைக்கு பவுலர்கள் எனக்கு எதிராக கடைபிடிக்கும் உத்திகள் என்னால் அந்த ஷாட்டை ஆடமுடியாமல் உள்ளது” என்றார் தோனி.