Published : 07 Jul 2021 04:51 PM
Last Updated : 07 Jul 2021 04:51 PM

சிஎஸ்கேவின் மகாராஜா: பயிற்சியாளராகிறாரா தோனி?- ஆஸி. முன்னாள் வீரர் சூசகம்

சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ் தோனி: படம் உதவி: ட்விட்டர்

மெல்போர்ன்

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் எம்.எஸ்.தோனி, 2022ஆம் ஆண்டு ஏலத்தில் அணியில் தக்கவைக்கப்படாவிட்டால், அவரின் நிலை என்ன என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் பதில் அளித்துள்ளார்.

சிஎஸ்கே அணி உருவாக்கப்பட்டதிலிருந்து அந்த அணியின் வெற்றிகர கேப்டனாக தல தோனி உள்ளார். இதுவரை 3 முறை சிஎஸ்கே அணிக்குக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
பல்வேறு சரிவுகளில் சிஎஸ்கே அணி இருந்தபோதிலும் தோனியின் திறமையான கேப்டன்சியால் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் செல்வதில் வல்லவர். தோனி இல்லையென்றால், சிஎஸ்கே அணி இல்லை என்ற நிலைதான் இருக்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக்கிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், “ 2022-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி தோனியைத் தக்கவைக்காவிட்டால் சூழலை நினைத்துப் பாருங்கள். தோனி, அவரின் அனுபவம், ஐபிஎல் தொடரில் எந்த அணிக்குத் தேவைப்படும்’’ என்று கேட்டிருந்தார்.

இதற்கு ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக் அளித்த பதிலில், “ சிஎஸ்கே அணியை விட்டு எம்எஸ் தோனி செல்ல மாட்டார். சிஎஸ்கே அணியின் மகாராஜா தோனி. அணியில் வீரராகத் தொடராவிட்டால், பயிற்சியாளராக தோனி தொடரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் டி20 மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். அதில் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் அடங்குவர். சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை, எம்.எஸ்.தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய உள்நாட்டு வீரர்களும், டூப்பிளசிஸ், பிராவோ, சாம் கரன் ஆகிய மூவரில் ஒருவர் தக்கவைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தோனிக்கு இன்றுடன் 40 வயதாகிவிட்டதால், இனிமேல் இளம் வீரர்களுக்கு இணையாகக் களத்தில் அதிரடியாக ஷாட்களை அடிப்பதையும், ஓடுவதையும் எதிர்பார்க்க முடியாது. தோனி தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும், வயது முதுமை என்பது அவ்வப்போது உடலில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும்.

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனி இருந்தாலும், கேப்டன் பணியைவிடக் கூடுதலாகவே வீரர்களைத் தயார் செய்வது, உத்வேகப்படுத்துவது, எந்த நேரத்தில் எவ்வாறு பந்து வீசுவது, எந்த வீரருக்கு எவ்வாறு பந்து வீசுவது, யாரை எந்த நேரத்தில் களமிறக்குவது எனப் பயிற்சியாளருக்குரிய பணிகளைத்தான் செய்துவருகிறார். ஆதலால், அடுத்துவரும் ஆண்டுகளில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக தோனியும், பிளெமிங்கும் இணைந்து பணியாற்றினாலும் வியப்பில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x