Published : 04 Jul 2021 11:31 AM
Last Updated : 04 Jul 2021 11:31 AM

பிரித்வி ஷாவை அழைத்து அணிக்குள் ஏற்கெனவே இருக்கும் வீரர்களை அவமானப்படுத்துகிறீர்கள்: கபில் தேவ் காட்டம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் | கோப்புப்படம்

புதுடெல்லி


இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு பிரித்வி ஷா அழைக்கும் திட்டம் என்பது ஏற்கெனவே அணிக்குள் இருக்கும் வீரர்களை அவமானப்படுத்துவதாகும் என்று இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆனால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில்லுக்கு ஏற்பட்ட காயத்தால் அவரால் 8 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு இலங்கைப் பயணத்தில் உள்ள பிரித்வி ஷாவை அழைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இங்கிலாந்துக்கு 20 வீரர்கள் கொண்ட இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியில் ஷுப்மான் கில் தவிர்த்து, தொடக்க ஆட்டத்துக்கு மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் என மூவர் இருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர்த்துவிட்டு புதிதாக தொடக்க ஆட்டக்காராக பிரித்வி ஷாவை அழைக்க முடிவு எடுப்பது, அணிக்குள் இருக்கும் வீரர்களை அவமானப்படுத்துவதாகும். இவ்வாறு செயல்படுவது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல.

புதிய தொடக்க ஆட்டக்காரருக்கு எந்த அவசியமும் இல்லை. அணியைத் தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். தேர்வாளர்கள் ஒரு அணியைத் தேர்வு செய்து அனுப்பியுள்ளார்கள், இந்த 20 பேர் கொண்ட அணி நிச்சயம், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலியின் ஆலோசனையில்லாமல், அவர்களின் அறிவுரையை கேட்காமல் தேர்ந்தெடுக்க முடியாது.

நான் சொல்வது என்னவென்றால், அணிக்குள் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகிய இரு பெரிய தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கும்போது, புதிய தொடக்க ஆட்டக்காரர் தேவையில்லை.

கேப்டன், அணி நிர்வாகத்திடம் நான் கேட்பது என்னவென்றால், தேர்வுக்குழுவிடம் எனக்கு இந்த குறிப்பிட்ட வீரர்கள்தான் வேண்டும் என்று சொல்ல முடியுமா, தேர்வுக்குழுவை மீறி செயல்படுவீர்களா. அவ்வாறு செயல்படுவதாக இருந்தால், தேர்வுக் குழுவினர் தேவையில்லையே. கேப்டன் கோலி, ரவிசாஸ்திரிஇருவரும்தான் எனக்கு பதில் அளிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை இது தவறான வழிகாட்டலாகும். தேவையான வீரர்கள் இருக்கும்போது, அவர்களை அவமானப்படுத்தக் கூடாது. அவர்கள் மிகப்பெரிய வீரர்கள். எந்தவிதமான தேவையில்லாத சர்ச்சையும் தேவையில்லை
இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x