Published : 04 Jul 2021 03:12 AM
Last Updated : 04 Jul 2021 03:12 AM

யூரோ கால்பந்து தொடர்: பெல்ஜியத்தை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது இத்தாலி

முனிச்

யூரோ கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இத்தாலி அணி.

ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 13-வது நிமிடத்தில் இத்தாலி கோல் அடித்தது. ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. 22-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கெவின் டி ப்ரூய்ன் உதைத்த பந்தை இத்தாலி கோல் கீப்பர் கியான்லூகி டோனாரும்மா அருமையாக பாய்ந்து கோல் விழவிடாமல் தட்டிவிட்டார். 31-வது நிமிடத்தில் நெருக்கமான வகையில் 3 டிபன்டர்களுக்கு ஊடாக நின்ற இத்தாலியின் நிக்கோலே பரேல்லாவுக்கு மார்கோ வெராட்டி பந்தை தட்டிவிட அவர் அதை கோலாக மாற்றினார். இதனால் இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது.

44-வது நிமிடத்தில் நிக்கோலே பரேல்லா உதவியுடன் பந்தை பெற்ற லாரேன்ஸோ இன்சைன் கோல் அடிக்க இத்தாலி 2-0 என முன்னிலை பெற்றது. அடுத்த நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்குள் பெல்ஜியம் வீரர் ஜெர்மி டோகுவை இத்தாலியின் ஜியோவானி டி லோரென்சோ முரட்டுத்தனமாக இடைமறித்தார். இதனால் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி லூகாகு கோல் அடித்தார்.

முதல் பாதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதி முடிவில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியால் 32 ஆட்டங்களாக வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது இத்தாலி அணி.

அரை இறுதி சுற்றில் இத்தாலி அணி ஸ்பெயினை சந்திக்கிறது. ஸ்பெயின் அணி தனது கால் இறுதி சுற்றில் சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதன் பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் 30 நிமிடங்களில் மேற்கொண்டு இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்கப்படவில்லை. இதனால் வெற்றிக்கு பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x