#EngvIND புஜாரா சரிவரமாட்டார்; பிரித்வி ஷாவை களமிறக்குங்கள்: பிராட் ஹாக் ஆலோசனை

பிரித்வி ஷா | கோப்புப்படம்
பிரித்வி ஷா | கோப்புப்படம்
Updated on
2 min read

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-வது இடத்தில் சத்தேஸ்வர் புஜாராவுக்குப் பதிலாக வேறு வீரரை களமிறக்க விரும்பினால், பிரித்வி ஷாவை தேர்வு செய்யலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் யாரும் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை.

குறிப்பாக, இந்திய அணியின் சுவராக வளர்ந்துவரும் சத்தேஸ்வர் புஜாரா இரு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா களமிறங்கும் 3-வது இடத்தில் வேறு வீரரை களமிறக்கலாமா என்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீ்ச்சாளர் பிராட் ஹாக் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “ புஜாராவுக்குப் பதிலாக வேறு வீரரை அவர் இடத்தில் களமிறக்கலாம். என முடிவு செய்தால், அதற்கு கே.எல்.ராகுல் சரியாக இருப்பார் என்று கூற இயலாது, ராகுல் சிறந்த தொடக்க ஆட்டக்காரர். புஜாராவின் 3-வது இடத்துக்கு என்னைப் பொறுத்தவரை பிரித்வி ஷாவை களமிறக்கலாம்.

தொடக்க வீரராக பிரித்வி ஷா களமிறங்குவதைவிட, 3-வது வீரராக களமிறங்குவது அவருக்குப் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். பிரித்வி ஷாவுக்கு நல்ல திறமை இருக்கிறது, நீண்ட எதிர்காலம் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரித்வி ஷா இல்லாவிட்டாலும், வேறு வீரரைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால், பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பளிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்வி ஷா தற்போது, இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் பிரி்த்வி ஷா இடம் பெற்றுள்ளார்.

இலங்கை, இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் தொடர் வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. சமீபத்தில் முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புஜாரா எதிர்பார்த்த அளவு பேட் செய்யவில்லை. அவரின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய கேப்டன் கோலி, அணியில் உல்ள சில முக்கிய வீரர்கள் ரன் சேர்க்கத் தவறிவிட்டனர் என வருத்தம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாக விளையாடிய புஜாரா, அதன்பின் சென்னையில் நடந்த இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்தார் அதன்பின் எதிலுமே விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in