

டிசம்பர் மாதம் நடக்கும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு அளித்தால், டி20 உலகக் கோப்பையைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்துக்கு முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, மே.இ.தீவுகள், வங்கதேசம் அணிக்கு எதிராக நடக்கும் ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் விலகியுள்ளார்.
இதற்கிடையே டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14-ம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 8-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.
இந்நிலையில் தனக்கு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவதைவிட, ஆஷஸ் தொடருக்குத்தான் அதிகமான முக்கியத்துவம் அளிப்பேன் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸி. கிரிக்கெட்.காம் இணையதளத்துக்கு ஸ்டீவ் ஸ்மித் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இப்போதிருந்து குறுகிய கால இடைவெளிதான் இருக்கிறது. இப்போதுதான் உடல்நலத்துடன் இருக்கிறேன் என்றாலும் முழுமையாக இல்லை. ஆனால், உடல்நலம் தேறிவிடுவேன். டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அணியில் இடம் பெறவே விரும்புகிறேன்.
ஆனால், என்னுடைய கண்ணோட்டத்தில், டெஸ்ட் கிரிக்கெட்தான் என்னுடைய இலக்காக இருக்கிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதை அதிகமாக விரும்புவேன். கடந்த காலத்திலும் அந்தத் தொடரில் விரும்பி விளையாடி இருக்கிறேன்.
எந்த இடத்தில் என்னால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமோ அந்த இடத்தில் எனது கவனத்தைத் திருப்ப முயல்கிறேன். உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடமாட்டேன் என்ற அர்த்தம் எடுக்கக் கூடாது. அதை நோக்கியே நகர்கிறேன். சில நேரங்களில் அது நடக்காமலும் போகலாம். ஆஷஸ் தொடருக்காக டி20 உலகக் கோப்பைப் போட்டியை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்.
ஆனால், என்னுடைய முதன்மையான நோக்கம் என்பது ஆஷஸ் டெஸ்ட் தொடர்தான். 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயார்படுத்த விரும்புகிறேன். ஐபிஎல் தொடரில் நான் விளையாடும்போது முழு உடல் தகுதியுடன் விளையாடவில்லை.
சில நேரங்களில் உடல் வலிக்காக மாத்திரை சாப்பிட்டுத்தான் விளையாடினேன். இதனால்தான் என்னால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட முடியவில்லை. ஆனால் தொடர்ந்து எடுத்துவரும் சிகிச்சையால், நல்ல முன்னேற்றம் தெரிகிறது. பேட்டிங் பயிற்சி எடுத்து வருகிறேன்''.
இவ்வாறு ஸ்மித் தெரிவித்தார்.