Last Updated : 03 Jul, 2021 09:12 AM

 

Published : 03 Jul 2021 09:12 AM
Last Updated : 03 Jul 2021 09:12 AM

வலுவானது இந்திய அணி: 14வீரர்கள் சர்வதேச அனுபவமுள்ளவர்கள்: ரணதுங்கா வாயை அடைத்த இலங்கை வாரியம்


இலங்கை வந்துள்ள இந்திய அணி வலுவான வீரர்களைக் கொண்ட அணி. இதில் உள்ள 20 வீரர்களில் 14 பேர் தேசிய அணிக்காக விளையாடியவர்கள் என்று முன்னாள் கேப்டன் ரணதுங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான மூத்த வீரர்கள் கொண்ட இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்ககேற்கச் சென்றுள்ளது.

அதேசமயம், அனுபவ வீரர் ஷிகர் தவண் தலைமையில் பெரும்பாலும் சர்வதேச அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இந்திய அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும், என்சிஏ தலைவர் ராகுல் திராவிட் செயல்படுகிறார்.

இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார், யஜூவேந்திர சஹல், குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேத்தன் சக்காரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அர்ஜூன ரணதுங்கா

இந்நிலையில் இலங்கைக்கு மூத்த வீரர்களைக் கொண்ட முதல்நிலை சீனியர் அணியை அனுப்பாமல், 2-ம் தர அணியை பிசிசிஐ அனுப்பி வைத்தது குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா காட்டமாகப் பேசினார்.

அதுமட்டுமல்லாமல், இலங்கைக்கு 2-ம் தர இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. 2-ம் தர இந்திய அணி இங்கு வந்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணி்க்கு அவமானத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும். தொலைக்காட்சி வர்த்தகச் சந்தை, ரேட்டிங் ஆகியவற்றுக்காக இந்தியாவின் 2-ம் தர அணியுடன் விளையாட ஒப்புக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியத்தைத்தான் குறைகூறுவேன்.

இந்திய கிரிக்கெட் வாரியம், தங்களின் சிறந்த அணியை இங்கிலாந்து தொடருக்கு அனுப்பிவைத்துவிட்டு, பலவீனமான அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதுபோன்ற செயலுக்கு எங்கள் கிரிக்கெட் வாரியத்தைத்தான் குறை கூற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ரணதுங்காவின் பேச்சுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது “ ஷிகர் தவண் தலைமையில் இலங்கை வந்துள்ள இந்திய அணி வலுவான அணி. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 20 வீரர்களில் 14 வீரர்கள் அந்நாட்டு தேசிய அணிக்காக பல்வேறு அணிகளுக்கு எதிராக விளையாடிய அனுபவம் உள்ளவர்கள்.

ஒருநாள், டெஸ்ட், டி20 என 3 தரப்பு போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். பல்வேறுதரப்பினர் ஊடகங்களில் அணியைப் பற்றி கருத்துக்களை தெரிவி்த்தாலும், இலங்கை வந்துள்ள இந்திய அணி வலுவானது, 2-ம்தரமான அணி அல்ல என்று தெரிவிக்கிறோம். இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இன்றுள்ள நவீன கிரிக்கெட்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் சிறப்புவாய்ந்த அணியை உருவாக்க முயல்கிறார்கள். அந்த வகையில் ஒருநாள், டி20 போட்டிக்கான சிறந்த வீரர்களை உருவாக்க இந்திய அணி பயணித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x