

2-ம் தர இந்திய இந்திய அணியை ஒருநாள், டி20 தொடர் விளையாட இலங்கைக்கு அனுப்பியுள்ளார்கள். இலங்கை அணிக்கு ஏற்பட்ட அவமானம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான மூத்த வீரர்கள் கொண்ட இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்ககேற்கச் சென்றுள்ளது.
அதேசமயம், அனுபவ வீரர் ஷிகர் தவண் தலைமையில் பெரும்பாலும் சர்வதேச அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இந்திய அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும், என்சிஏ தலைவர் ராகுல் திராவிட் செயல்படுகிறார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ரவிந்திர ஜடேஜா போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத இந்திய அணி சென்றுள்ளது.இலங்கை சென்ற இந்திய அணி 14 நாட்கள் தனிமைக்காலத்தை முடித்து பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார், யஜூவேந்திர சஹல், குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேத்தன் சக்காரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு மூத்த வீரர்களைக் கொண்ட முதல்நிலை சீனியர் அணியை அனுப்பாமல், 2-ம் தர அணியை பிசிசிஐ அனுப்பி வைத்தது குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா காட்டமாகப் பேசியுள்ளார்.
அர்ஜுன ரணதுங்கா அவரின் இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இலங்கைக்கு 2-ம் தர இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. 2-ம் தர இந்திய அணி இங்கு வந்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணி்க்கு அவமானத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும். தொலைக்காட்சி வர்த்தச்சந்தை, ரேட்டிங் ஆகியவற்றுக்காக இந்தியாவின் 2-ம் தர அணியுடன் விளையாட ஒப்புக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியத்தைத்தான் குறைகூறுவேன்.
இந்திய கிரிக்கெட் வாரியம், தங்களின் சிறந்த அணியை இங்கிலாந்து தொடருக்கு அனுப்பிவைத்துவிட்டு, பலவீனமான அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதுபோன்ற செயலுக்கு எங்கள் கிரிக்கெட் வாரியத்தைத்தான் குறை கூற வேண்டும்.
சர்வதேச அளவில் இலங்கை அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. இலங்கை அணியில் வீரர்களிடம் கட்டுப்பாடு, ஒழுக்கம் இல்லை. அதனால்தான் பயோ-பபுளை மீறியதால்தான் 3 மூத்த வீரர்களை இங்கிலாந்து வாரியம் திருப்பி அனுப்பிவிட்டது. அனைத்துக்கும் வாரியத்தில் நடக்கும் ஒழுக்கமற்ற நிர்வாகமே காரணம். நான் பொறுப்பில் இருந்தபோது இதுபோன்ற செயல்களை நடக்க அனுமதித்து இல்லை.
இவ்வாறு ரணதுங்கா தெரிவித்தார்.