

யூரோ கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் உலக சாம்பியனான பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து அணி.
புக்கரஸ்ட் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 15-வதுநிமிடத்தில் ஸ்டீவன் ஜூபர் அடித்த கிராஸை தலையால் முட்டி கோலாக மாற்றினார் சுவிட்சர்லாந்தின் ஹாரிஸ் செஃபெரோவிக். இதனால் சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது. 55-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அருமையான இந்த வாய்ப்பை ரிக்கார்டோ ரோட்ரிக்ஸ் கோலாக மாற்றத் தவறினார். இதன் பின்னர் பிரான்ஸ் அணி இரட்டை பதிலடி கொடுத்தது. 57 மற்றும் 59-வது நிமிடங்களில் கரீம் பென்சீமா கோல் அடிக்க பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றது.
75-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து பால் ஃபோக்பா கர்லிங் செய்த பந்து கோல் வலையை துளைக்க பிரான்ஸ் அணி 3-1 என்ற முன்னிலையை நோக்கிநகர்ந்தது. ஆட்டம் முடிவடைய 9 நிமிடங்களே இருந்த நிலையில் சுவிட்சர்லாந்து அணி இரு கோல்களை அடித்து மிரளச் செய்தது. 81-வதுநிமிடத்தில் கெவின் மபாபு உதவியுடன் பந்தை பெற்ற ஹாரிஸ் செஃபெரோவிக் தலையால் முட்டி கோல் அடித்தார். தொடர்ந்து கிரானிட் ஷாகா விரைவாக கடத்திக் கொடுத்த பந்தை கோலாக மாற்றி அசத்தினார் மரியோ கவ்ரனோவிக்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சுவிட்சர்லாந்து அணி சார்பில் மரியோ கவ்ரானோவிக், ஃபேபியன் ஷார், மானுவல் அகன்ஜி, ரூபன் வர்காஸ், அட்மிர் மெஹ்மதி ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். பிரான்ஸ் அணி சார்பில் பால் ஃபோக்பா, ஆலிவர் கிரவுட், மார்கஸ் துராம், பிரெஸ்னல் கிம்பெம்பே ஆகியோர் கோல் அடித்தனர். கடைசியாக கிளியன்பாப்பே அடித்த பந்தை சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் யான் சோமர் தனது இடது கையால் தட்டிவிட பிரான்ஸ் அணியின் கனவு கலைந்தது.
1938-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். மேலும் 1954-ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவிலான தொடரில் தற்போதுதான் சுவிட்சர்லாந்து அணி கால் இறுதி சுற்றில் கால்பதித்துள்ளது. கடைசியாக அந்த அணி 1954-ம் ஆண்டு உலகக் கோப்பையில் கால் இறுதியில் விளையாடியிருந்தது. இம்முறை கால் இறுதி சுற்றில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது சுவிட்சர்லாந்து.