

கடந்த வாரம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தின் 4 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவுக்கு கைகொடுத்தவர் முகமது ஷமி. அவரைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
1990-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா என்ற இடத்தில் பிறந்தவர் முகமது ஷமி. ஷமியின் அப்பா தவுசிப் ஒரு வேகப்பந்து வீச்சாளர். இதனால் சிறு வயதில் தனது அப்பாவிடம் பயிற்சி பெற்ற முகமது ஷமி, 15 வயது முதல் பத்ருதீன் சித்திக் என்பவரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டார். சிறுவயதில் சிறப்பாக பந்துவீசினாலும், உத்தரப் பிரதேச கிரிக்கெட் வாரியத்தில் இருந்துவந்த சில அரசியல் காரணங்களால் முகமது ஷமிக்கு அந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பயிற்சியாளரின் ஆலோசனைப்படி மேற்கு வங்கத்துக்கு சென்ற முகமது ஷமி, அம்மாநில அணியில் இடம் பிடித்தார்.
ரஞ்சி கோப்பை போட்டிகளில் மேற்கு வங்க அணிக்காக சிறப்பாக பந்து வீசியதால், 2012-ம் ஆண்டில் இந்தியா ஏ அணிக்கும், பின்னர் 2013-ம் ஆண்டில் இந்திய அணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், 8 ஆட்டங்களில் 17 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி ரசிகர்களைக் கவர்ந்தார். 50 டெஸ்ட் போட்டிகளில் 180 விக்கெட்களையும், 79 ஒருநாள் போட்டிகளில் 148 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ள முகமது ஷமி, இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்கிறார்.
நாளை முதல் எறும்பு முதல் எந்திரன் வரை அனைத்தையும் தெரிந்துகொள்ள ‘பளிச் பத்து’ - புதிய பகுதி.