

ஐபிஎல் டி 20 தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரு ஆண்டுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் தேர்வாகின. புனே அணியின் உரிமையை நியூ ரைஸிங் நிறுவனமும், ராஜ்கோட் அணியின் உரிமையை இண்டெக்ஸ் செல்போன் நிறுவனமும் பெற்றுள்ளன.
இந்த இரு அணிகளும் சென்னை, ராஜஸ்தான் அணியில் ஆடிய வீரர்களை தங்களது அணிகளுக்காக தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. முதற்கட்டமாக இரு அணிகளும் தலா 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான ஏல நடைமுறை மும்பை கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் இன்று காலை சுமார் 12 மணி அளவில் நடக்கிறது.
ரூ.40 கோடி முதல் 66 கோடிக்குள் வீரர்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் முதல் வீரரை தேர்வு செய்யும் உரிமை புனே அணிக்கு வழங்கப்படுகிறது. இரு அணியும் முதல் வீரரை தலா ரூ.12.5 கோடிக்கு தேர்வு செய்ய வேண்டும். அடுத்த 4 வீரர்கள் முறையே ரூ.9.5 கோடி, ரூ.7.5 கோடி, ரூ.5.5 கோடி, ரூ.4 கோடிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்த முறையில் அப்படியே வீரர்களை தேர்ந்தெடுத்தால் மொத்த தொகையில் பாதிக்கு மேல் சென்றுவிடும். அதனால் எஞ்சிய வீரர்களை ஏலம் எடுப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் இரு அணியும் 5 வீரர்களை ஏலம் எடுக்குமா? அல்லது ஒரு சில வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ளுமா என்பது இன்று தெரியும்.
சென்னை, ராஜஸ்தான் ஆகிய இரு அணியிலும் மொத்தம் 50 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் தோனி, ரவீந்திர ஜடேஜா, ரஹானே, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ஸ்டீவ் ஸ்மித், மெக்குலம், வாட்சன் உள்ளிட்டோர் நட்சத்திர வீரர்கள். கடந்த 8 ஆண்டுகளாக சென்னை அணிக்காக ஆடிய தோனியை புனே அணி ரூ.12.5 கோடி கொடுத்து தக்கவைத்துக்கொள்ளும் என தெரிகிறது. ஜடேஜா, அஸ்வின் ஆகியோருக்கும் மவுசு இருக்கும்.
இரு அணிகளும் தக்கவைத்துக் கொள்ளப்படாத வீரர்கள் பிப்ரவரி 6ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். ஐபிஎல் டி 20 தொடரின் 9வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.