

யூரோ கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தது இத்தாலி அணி.
யூரோ கால்பந்து தொடரில் நேற்று லண்டனில் நடைபெற்ற நாக்-அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி - ஆஸ்திரியா அணிகள் மோதின. 67-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் டேவிட் அலபா தலையால் முட்டிய பந்தை கோல்கம்பத்துக்கு மிக அருகே நின்ற மார்கோ அர்னாடோவிக் கோல் வலைக்குள் திணித்தார். ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. நிர்ண யிக்கப்பட்ட 90 நிமிடங்களுக்குள் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படாததால் வெற்றியை தீர்மானிக்க 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
இதில் 95-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இத்தாலியின் லியோனார்டோ ஸ்பினசோலா அடித்த பந்தை தலையால் முட்டி கட்டுப்படுத்தி அதன் பின்னர் ஆஸ்திரியா டிபன்டரை லாவகமாக ஏமாற்றி கோல் அடித்து அசத்தினார் ஃபெடரிகோ சிசா.
இதனால் இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது. 105-வது நிமிடத்தில் பிரான்செஸ்கோ அசெர்பி உதவியுடன் மேட்டியோ பெசினா கோல் அடிக்க இத்தாலி 2-0 என முன்னிலை பெற்றது.114-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் லூயிஸ் ஸ்காப் கார்னரில் இருந்து உதைத்த பந்தை சாசா கலாஜ்ட்ஜிக் கோலாக மாற்றினார். இருப்பினும் ஆஸ்திரியா அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இன்றைய ஆட்டம்
குரோஷியா - ஸ்பெயின்
நேரம்: இரவு 9.30
பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து
நேரம்: நள்ளிரவு 12.30
நேரலை: சோனி சிக்ஸ்