

உலகின் பண்டையகால விளையாட்டுகளில் ஒன்றாக நீச்சல் உள்ளது. கி.மு. 2500 ஆண்டுக்கு முன்பிருந்தே எகிப்து, கிரேக்கம், ரோமானிய கலாச்சாரத்தில் நீச்சல் விளையாட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதிலும், கிரேக்கம் மற்றும் ரோம் நாடுகளில் சிறுவர்களுக்கு இளவயது பாடங்களில் ஒன்றாக நீச்சல் இருந்துள்ளது.
இப்படி பன்னெடுங்காலமாக நீச்சல் இருந்தாலும், இதில் சர்வதேச அளவிலான போட்டிகள் 19-ம் நூற்றாண்டில்தான் நடக்கத் தொடங்கியுள்ளன.
1837-ம் ஆண்டில் லண்டன் நகரில் சர்வதேச நீச்சல் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில், லண்டன் நகரில்6 உள்ளரங்க நீச்சல் குளங்கள் உருவாக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, முதலாவது சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலியாவில் 1946-ம் ஆண்டு நடத்தப்பட்டது. முதல் முறை 400 மீட்டர் தூரத்துக்கு நீச்சல் பந்தயம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலும் நீச்சல் போட்டிகள் புகழ்பெறத் தொடங்கின.
1896-ம் ஆண்டில் நடந்த முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டியில் ஒரு ஆட்டமாக நீச்சலும் இருந்துள்ளது. ஆனால், அந்த ஆண்டில் ஆடவர் பிரிவில் மட்டுமே நீச்சல் போட்டி நடத்தப்பட்டது. பெண்களுக்கான பிரிவில் 1912-ம் ஆண்டுமுதல் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஃப்ரீ ஸ்டைல், பிரெஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர்ஃபிளை மற்றும் இவை மூன்றும் கலந்த மெட்லி ஆகிய 4 வகை நீச்சல் போட்டிகள் உள்ளன. 50 மீட்டர் முதல் 1,500 மீட்டர் வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் ஆரம்பம் முதல் ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.