

விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரின் அரையிறுதியில் குஜராத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அபிநவ் முகுந்த் சதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்றும் பலன் இல்லாமல் போனது.
முதலில் பேட் செய்த குஜராத் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. ஜூனிஜா 74, காந்தி 71 ரன் எடுத்தனர். தமிழகம் தரப்பில் அஸ்வின் 3, சங்கர் 2 விக்கெட் கைப்பற்றினர். 249 ரன்கள் எடுத்தால் பெற்றி என்ற இலக்குடன் தமிழகம் பேட் செய்தது.
அபிநவ் முகுந்த்-தினேஷ் கார்த்திக் ஜோடி 16.2 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. தினேஷ் கார்த்திக் 41 ரன்னில், அக்ஸர் படேல் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். அவரை தொடர்ந்து வந்த பாபா அபராஜித் 7, பாபா இந்திரஜித் 1, முரளி விஜய் 0, அஸ்வின் 22 ரன்களில் அக்ஸர் படேல் பந்தில் வீழ்ந்தனர். ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அபிநவ் முகுந்த் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.
சதீஷ் 15, சங்கர் 10, ரங்கராஜன் 3, அஸ்வின் கிறிஸ்ட் 7 ரன்களில் நடையை கட்ட முடிவில் தமிழக அணி 47.3 ஓவரில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அபிநவ் முகுந்த் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் தரப்பில் அக்ஸர் படடேல் 6, பும்ரா 2, ஹர்திக் படேல் 1 விக்கெட் கைப்பற்றினர். 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டெல்லி வெற்றி
பெங்களூருவில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இமாச்சல் பிரதேச அணியை தோற்கடித்தது. முதலில் பேட் செய்த இமாச்சல் பிரதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்தது. பிபுல் சர்மா 51 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் பாத்தி, நெகி, ரானா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த டெல்லி 41.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து வெற்றி பெற்றது. உன்முகுந்த் சந்த் 80, ஷிகர் தவண் 39, காம்பீர் 16 ரன் எடுத்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி இறுதிப்போட்டியில் கால் பதித்தது.
பெங்களூரு சின்னசாமி மைதா னத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி-குஜராத் அணிகள் மோதுகின்றன.