Published : 26 Jun 2021 03:11 AM
Last Updated : 26 Jun 2021 03:11 AM

கோபா அமெரிக்கா கால்பந்து: கால் இறுதி சுற்றில் உருகுவே

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பொலிவியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு உருகுவே முன்னேறியது.

பிரேசிலின் குயாபா நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11-வது நிமிடத்தில் பொலியாவுக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் வீரர் ரோட்ரிகோ ரமல்லோ பந்தை கோல்கம்பத்துக்கு மேலே அடித்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து 40-வது நிமிடத்தில் உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ் பாக்ஸ் பகுதிக்குள் அபாயகரமான வகையிலான கிராஸை அடித்தார். இதை பொலிவியா வீரர் ஏர் குயின்டெரோஸ் இடைமறித்தார். அப்போது பந்து பொலிவியா கோல்கீப்பர் கார்லோஸ் லம்பே காலில் பட்டு சுயகோலானது. இதனால் முதல் பாதியில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.

எனினும் 79-வது நிமிடத்தில் ஃபேசுண்டோ டோரஸ் அடித்த கிராஸை எடிசன் கவானி கோலாக மாற்றினார். இதனால் உருகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உருகுவே அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. மேலும் 4 புள்ளிகளுடன் கால் இறுதி சுற்றுக்கும் முன்னேறியது. பொலிவியா அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சிலி - பராகுவே அணிகள் மோதின. இதில் பராகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x