விளையாட்டாய் சில கதைகள்: உலகக் கோப்பை நாயகன்

விளையாட்டாய் சில கதைகள்: உலகக் கோப்பை நாயகன்
Updated on
1 min read

1983-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் மொகீந்தர் அமர்நாத். இத்தொடரின் இறுதிப் போட்டியில் 26 ரன்களை அடித்ததுடன் 3 விக்கெட்களையும் எடுத்த அமர்நாத், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டி மட்டுமின்றி அந்த உலகக் கோப்பை தொடரிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமர்நாத், 237 ரன்களைக் குவித்ததுடன் 8 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதத்தை அடித்தவரான லாலா அமர்நாத்தின் மகன்தான் மொகீந்தர் அமர்நாத். முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானின் மகனாக இருந்தபோதிலும், மொகீந்தர் அமர்நாத்துக்கு அவ்வளவு சீக்கிரத்தில் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடுமையான போராட்டத்துக்கு பிறகே 1969-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சேர்க்கப்பட்டார். இதில் சிறப்பாக ஆடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு 1976-ம் ஆண்டில்தான் அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்தது.

ஒரு தொடரில் சிறப்பாக ஆடுவதும், அடுத்த தொடரில் அதே வேகத்தில் மோசமாக ஆடுவதும் மொகீந்தர் அமர்நாத்தின் வழக்கம். உதாரணமாக 1983 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடிய அமர்நாத், அடுத்ததாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் மொத்தமே 1 ரன்னை மட்டுமே எடுத்தார். இதனால் இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு நிரந்தரமாக இடம் கிடைக்கவில்லை.

எதையும் வெளிப்படையாக பேசுவதால் பலமுறை விமர்சனத்துக்கு உள்ளானார். 1988-ம்ஆண்டு, நியூஸிலாந்து தொடருக்கு தான் தேர்ந்தெடுக்கப்படாததால், தேர்வுக் குழுவினரை ‘கோமாளிகளின் கூட்டம்’ என்று விமர்சித்தார். 2011-ல் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்த இவர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோற்றதால் தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால் இதை ஏற்காத கிரிக்கெட் வாரியம், அமர்நாத்தை தேர்வுக் குழுவில் இருந்து நீக்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in