

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தண்டனையும் அனுபவித்து திருந்தி வந்த மொகமது ஆமீர் மீண்டும் அணியில் இடம்பெறுவதை எதிர்ப்பது தவறு என்று இம்ரான் கான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியவர் அணியில் இடம்பெறுவது கூடாது என்று பாகிஸ்தான் அணியின் மொகமது ஹபீஸ் மற்றும் அசார் அலி எதிர்ப்பு தெரிவித்தனர், பின்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களை எச்சரித்தது.
இந்நிலையில் இம்ரான் கான் தெரிவிக்கும் போது, “19-வயது வீரர் தவறிழைத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை காலத்தை முழுதும் அனுபவித்து விட்டு திருந்தி வந்துள்ளார் ஆமீர். எனவே அவர் மீண்டும் விளையாட வேண்டும்.
அவர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். எனவே அவரை எதிர்ப்பவர்கள் தங்கள் எதிர்ப்பை நிறுத்திக் கொள்ளுமாறு நான் முறையிடுகிறேன்.
நாட்டை கிரிமினல்கள் வழிநடத்துகின்றனர், இந்நிலையில் தண்டனையை அனுபவித்துவிட்டு திரும்பும் ஒருவரை மீண்டும் அணியில் விளையாடக்கூடாது என்று கூறுவது மடத்தனமாக உள்ளது” என்று சாடியுள்ளார் இம்ரான்.