அடுத்தடுத்த வெற்றி: இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து

அடுத்தடுத்த வெற்றி: இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து
Updated on
1 min read

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

வியாழக்கிழமை நடந்த இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, முதல் போட்டியைப் போலவே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 117 ரன்களை மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து பேட்டிங் ஆடியபோது முதல் சில ஓவர்களுக்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசி வந்தனர். 7 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன்பின் லிவிங்ஸ்டோன், பில்லிங்ஸ் இணை சேர்ந்து 33 ரன்களைச் சேர்த்தனர்.

இதன்பின் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு மீண்டும் கணக்கிடப்பட்டு, 6 ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்று நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 112 என்று இருந்த இலக்கு 103 என்று மாறியது. மழைக்குப் பின் ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இலக்கை எளிதாக விரட்டினர்.

பில்லிங்ஸ் ஆட்டமிழந்தாலும் அதன்பின் களமிறங்கிய சாம் கரன், 8 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். வெற்றிக்கான ரன்களையும் கரன் அடித்தார். இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. கார்டிஃப்பில் நடந்த முதல் டி20 போட்டியையும் இங்கிலாந்து வென்றிருந்ததால் இந்த வெற்றியின் மூலம் தொடரைக் கைப்பற்றியது.

கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடந்து முடிந்த சவுத்தாம்டன் நகரில் நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in