Last Updated : 25 Jun, 2021 04:41 PM

 

Published : 25 Jun 2021 04:41 PM
Last Updated : 25 Jun 2021 04:41 PM

இறுதி என்றாலே ஒரு போட்டிதான்: கோலியின் கருத்துக்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பதிலடி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்க இனி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இறுதிப் போட்டி நடக்க வேண்டும் என்கிற இந்திய கேப்டன் விராட் கோலியின் யோசனையை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஏற்க மறுத்துள்ளார்.

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்தது. இந்தியா - நியூஸிலாந்து அணிகள் சந்தித்த இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான வெற்றியாளரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை வைத்துத் தீர்மானிப்பது சரியல்ல, மூன்று போட்டிகளாவது ஆட வேண்டும் என்று கூறியிருந்தார். இறுதிப் போட்டிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

"அடிப்படையில் யார் சிறந்த டெஸ்ட் அணி என்பதை ஒரே ஒரு போட்டியை வைத்துத் தீர்மானிப்பதை நான் முழுமையாக ஏற்கவில்லை. அது ஒரு தொடராக, மூன்று போட்டிகள் நடந்தால், எந்த அணிக்குத் திறமை இருக்கிறது, எந்த அணியால் எதிரணியை முழுமையாக வீழ்த்த முடிகிறது, மீண்டுவர முடிகிறது என்பதெல்லாம் தெரியும். இரண்டு நாட்கள் நன்றாக ஆடிவிட்டு அதன் பின் அழுத்தத்தால் சரியாக ஆடாமல் இருந்து, உடனே இவர்கள் நல்ல அணி இல்லை என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. எனக்கு அதில் நம்பிக்கையில்லை" என்று விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

தற்போது இதற்கு பதிலளித்திருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், தனது ட்விட்டர் பக்கத்தில், "திட்டமிட எங்கே இடம் இருக்கிறது? 3 டெஸ்ட் போட்டிகளுக்காக ஐபிஎல் தொடரை இரண்டு வாரங்கள் குறைத்துக் கொள்வார்களா என்பது சந்தேகமே. இறுதி என்பது ஒரு போட்டிதான். வீரர்களுக்கு/அணிகளுக்கு அந்த ஒரு போட்டியில் திறம்பட விளையாட வேண்டும் என்று தெரியும். அதுதான் அவர்களைச் சிறந்த வீரர்கள் என்பதைக் காட்டுகிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x