

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் ஜூன் 25, 1983. இந்த நாளில்தான் இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் இந்திய அணி சென்றது. இத்தொடரின் முதல் லீக் போட்டியிலேயே முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய தீவுகளை 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்த, உலகமே அதைப்பற்றி பரபரப்பாக பேசியது. இந்த வெற்றியால் உற்சாகமடைந்த இந்திய அணி தடதடவென முன்னேறி இறுதி ஆட்டம் வரை வந்தது.
1983-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை மீண்டும் சந்தித்தது இந்தியா. இப்போட்டியில் மோசமாக பேட்டிங் செய்த இந்திய அணி, 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதைத்தொடர்ந்து இந்திய அணி நிச்சயம் தோற்கும் என்றே பலரும் கருதினர். ஆனால் கேப்டன் கபில்தேவ் மட்டும், இப்போட்டியில் இந்தியா ஜெயிக்கும் என உறுதியாக நம்பினார். சக வீரர்களிடம், “நாம் இத்தனை தூரம் வருவோம் என்று யாரும் நினைக்கவில்லை. வந்துவிட்டோம். ஏற்கெனவே இத்தொடரில் ஒருமுறை மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றிருக்கிறோம். மீண்டும் வெல்ல முடியும் என்று நம்புவோம். கடுமையாக போராடுவோம்” என்றார். அவரது வார்த்தைகள் ஒவ்வொரு வீரருக்கும் உத்வேகத்தைக் கொடுத்தன.
மைதானத்தில் நம்பிக்கையுடன் கடுமையாக போராடிய அவர்கள் 43 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினர். இந்திய அணி கிரிக்கெட்டில் புதிய சரித்திரத்தைப் படைத்தது.