

மக்காவ் ஓபனில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு இந்திய பாட்மிண்டன் சங்கம் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
மக்காவ் ஓபன் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 6வது இடத்தில் இருந்த ஜப்பானின் மினாட்சு மிடானியை தோற்கடித்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில் மக்காவ் ஓபனில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு இந்திய பாட்மிண்டன் சங்கம் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா கூறும்போது, "சிந்து மீண்டும் பட்டம் வென்று பெருமை தேடித்தந்துள்ளார். நிச்சயம் பட்டம் வெல்வார் என்ற எங்களது எதிர்பார்ப்பை ஒரு வீராங்கனையாக அவர் பூர்த்தி செய்துள்ளார். எதிர்காலத்தில் சிந்து இதுபோன்ற மேலும் பல பட்டங்களை வெல்ல வேண்டும்" என்றார்.
இதற்கிடையே தனது அடுத்த இலக்கு இந்தோனேஷிய ஓபன் தான் என பி.வி.சிந்து தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "மக்காவ் ஓபனில் பட்டம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. எனது அடுத்த இலக்கு இந்தோனேஷியா ஓபன் தான். மக்காவ் ஓபன் பட்டம் எனக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் சிறப்பாக விளையாடினேன். மிடானி சிறந்த வீராங்கனை. அவரிடம் ஜப்பான் ஓபனில் தோல்வி அடைந்திருந்தேன்.
தற்போது அவரை தோற்கடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஜனவரி மாதம் இந்திய பாட்மிண்டன் லீக் தொடரில் பங்கேற்கிறேன். அதைத்தொடர்ந்து சையது மோடி, இந்தியன் ஓபன் உள்ளிட்ட பல்வேறு தொடர்கள் நடைபெற உள்ளன. அடுத்த ஆண்டு ஒலிம்பிக் வருடமும் கூட, எல்லா தொடர்களுமே முக்கியமானது தான்" என்று தெரிவித்தார்.
இந்தோனேஷிய ஓபன் போட்டி இன்று தொடங்கி வரும் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.