

நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸனைக் கட்டி அணைத்து இந்திய கேப்டன் கோலி வாழ்த்து தெரிவித்தார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. மழை காரணமாக ஆறாம் நாள் வரை நடந்த இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 217 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களும் இந்திய அணி எடுத்தது. இதன் மூலம் வெற்றி இலக்காக இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்துக்கு 139 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை நம்பிக்கையுடன் தொடங்கிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸனும், ராஸ் டெய்லரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணியின் வெற்றிக்குப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இதில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் அடங்குவர். இந்த நிலையில் வெற்றிக்கான ரன்னை நியூஸிலாந்து அடித்த பின்னர், அந்த அணியின் கேப்டன் வில்லியம்ஸனைக் கட்டி அணைத்து இந்திய கேப்டன் கோலி வாழ்த்து தெரிவித்தார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.