Published : 24 Jun 2021 05:50 am

Updated : 24 Jun 2021 07:30 am

 

Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 07:30 AM

யூரோ கால்பந்து தொடர்: நாக்-அவுட் சுற்றில் குரோஷியா, இங்கிலாந்து; 3-வது இடம் பிடித்த செக் குடியரசும் முன்னேற்றம்

euro-2020-updates

கிளாஸ்கோ

யூரோ கால்பந்து தொடரில் குரோஷியா, இங்கிலாந்து அணிகள் நாக்-அவுட் சுற்றக்கு முன்னேறின.

யூரோ கால்பந்து தொடரில் நேற்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 17-வது நிமிடத்தில் குரோஷியா முதல் கோல் அடித்தது. கோல்கம்பத்துக்கு அருகே இவான் பெரிசிக் தலையால் தட்டிவிட்ட பந்தை அருமையாக கட்டுப்படுத்தி கோல் அடித்து அசத்தினார் நிகோலா விளாசிக். இதனால் குரோஷியா 1-0 என முன்னிலை பெற்றது.


42-வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து பதிலடி கொடுத்தது. அந்த அணி சார்பில் கலும் மெக்ரிகோர் கோல் அடித்திருந்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. 62-வது நிமிடத்தில் மேட்டியோ கோவாசிக் உதவியுடன் பந்தை பெற்ற லூகா மோட்ரிக் இலக்கை நோக்கி துல்லியமாக உதைத்த பந்து கோல் வலையை துளைக்க குரோஷியா 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 77-வது நிமிடத்தில் லூகா மோட்ரிக் கார்னரில் இருந்து அடித்த பந்தை இவான் பெரிசிக் தலையால் முட்டி கோல் அடிக்க குரோஷியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. குரோஷியா அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டிருந்த நிலையில் 2-வது ஆட்டத்தை செக் குடியரசுக்கு எதிராக டிரா செய்திருந்தது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் ‘டி’ பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது குரோஷியா அணி.

லண்டன் நகரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - செக் குடியரசு அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 12-வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. அதேவேளையில் 4 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்த செக் குடியரசு அணியும் நாக்-அவுட் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இதே பிரிவில் 4 புள்ளிகள் பெற்ற போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் குரோஷியா 2-வது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றில் கால் பதித்திருந்தது.


யூரோ கால்பந்து தொடர்நாக்-அவுட் சுற்றுகுரோஷியா இங்கிலாந்துசெக் குடியரசுEURO 2020 updates

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

29 :

இன்றைய செய்தி
x