

மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்ததாக உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் கால்பந்து வீரர் நெய்மர். வருவாயிலும் அவர்களுக்கு இணையாக உள்ள நெய்மர், ஆண்டொன்றுக்கு 325 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். கடந்த ஒலிம்பிக் போட்டியில் பிரேசில் அணி தங்கப்பதக்கத்தை வெல்ல காரணமாக இருந்த நெய்மர், இப்போது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியிலும் பிரேசில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.
நம் நாட்டில் சிறுவர்கள் எப்படி தெருக்களில் கிரிக்கெட் விளையாடுகிறார்களோ, அதேபோல் பிரேசில் நாட்டில் சிறுவர்கள் தெருக்களில் கால்பந்து ஆடுவது வழக்கம். அப்படி தெருக்களில் கால்பந்து ஆட ஆரம்பித்த நெய்மர் ஜூனியர், இன்று சர்வதேச நட்சத்திரமாக உயர்ந்திருப்பதற்கு காரணம் அவரது அப்பாவும் முன்னாள் கால்பந்து வீரருமான நெய்மர் சீனியர் கொடுத்த பயிற்சி.
நெய்மரின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த ‘எஃப்சி சாண்டோஸ்’ என்ற கிரிக்கெட் கிளப் அவரை 11 வயதிலேயே பெரும் தொகையைக் கொடுத்து, தங்கள் கிளப்பில் சேர்த்துள்ளது. கிளப் கால்பந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
2010-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போதே பிரேசில் அணியில் நெய்மரை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். இதற்காக 14 ஆயிரம் கால்பந்து ரசிகர்கள் தேர்வுக் குழுவினரிடம் மனு அளித்தனர். ஆனால் பிரேசில் அணியில் நெய்மர் சேர்க்கப்படவில்லை.
அதே 2010-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் 17 வயதான நெய்மர் சேர்க்கப்பட்டார். தனது அறிமுக ஆட்டமான இதில், பிரேசிலுக்காக நெய்மர் தனது முதல் கோலை அடித்தார். இதைத்தொடர்ந்து பிரேசில் அணிக்காக 68 கோல்களை (ஜூன் 19-ம் தேதி வரை) நெய்மர் அடித்துள்ளார்.