

ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சியில் நேரலையாகக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த 3 போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை வங்கதேசத்தின் காஸி டிவி வாங்கியுள்ளது. இவர்கள் எந்த ஒரு இந்தியத் தொலைக்காட்சி நிறுவனத்துடனும் ஒளிபரப்பு ஒப்பந்தத்தில் இதுவரை ஈடுபடவில்லை.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மட்டும் ஆர்வம் காண்பித்தது. ஆனால் அது ரூ.5 கோடி மட்டுமே 3 போட்டிகளுக்கும் அளிப்பதாகக் கூறியுள்ளது.
இந்தத் தொகை நிச்சயம் குறைவானது என்று காஸி டிவி கருதுகிறது. சோனி தொலைக்காட்சி நிறுவனம் இந்தத் தொடரில் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அது ஃபீபா உலகக் கோப்பை கால்பந்து ஒளிபரப்பு உரிமைகளை வாங்கியுள்ளது. அதனால் இந்தக் கிரிக்கெட் தொடர் நேரடி ஒளிபரப்பிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறிவிட்டது.
இது குறித்து காஸி தொலைக்காட்சி அதிகாரி சலாஹுதீன் சவுத்ரி கூறுகையில், “ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மிகக் குறைந்த தொகைக்கு கேட்கிறது. பிசிசிஐ-க்கும் நியோ ஸ்போர்ட்ஸ் மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும் பிரச்சனைகள் இருப்பதால் அவர்களுக்கு உரிமைகளை நாங்கள் விற்க முடியாது. ஆகவே அடுத்த 2 நாட்களில் ஏதாவது நடந்தால்தான் இந்திய ரசிகர்கள் இந்தப்போட்டிகளை நேரலையாகக் காண முடியும்”என்கிறார்.
உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் நாங்கள் ஒளிபரப்பாளர்களை முடிவு செய்துவிட்டோம், இந்தியாவில் மட்டும் இன்னும் முடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.