இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? - சென்னை-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? - சென்னை-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை
Updated on
2 min read

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 2வது கட்ட அரையிறுதியின் கடைசி ஆட்டத்தில் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா சால்ட் லேக்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கொல்கத்தா டி அட்லெட்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பலப்பரீட்சை

8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் அரையிறுதிக்கு அட்லெட்டிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ், எப்.சி. கோவா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றன. 4 ஆட்டங்களை கொண்ட அரையிறுதி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

முதல் கட்ட அரையிறுதியில் டெல்லி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவையும், சென்னையின் எப்.சி. 3-0 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ டி கொல்கத்தாவையும் வீழ்த்தியது. இந்நிலையில் 2வது கட்ட அரையிறுதியின் கடைசி ஆட்டத்தில் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா சால்ட் லேக்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கொல்கத்தா டி அட்லெட்கோ அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி நெருக்கடியுடன் களம் காண்கிறது. அந்த அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஜெயித்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னறே முடியும். அதேவேளையில் சென்னை அணி கோல்கள் இன்றியோ, கோல்களுடனோ ஆட்டத்தை டிராவில் முடித்தாலே இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிடும். இதனால் சென்னை வீரர்கள் இன்று தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றுள்ள சென்னை அணி கடைசி ஆட்டத்தில் அருமையாக ஆடியது. பிரிஹிக் வாய்ப்பில், புருனோ பெலிஷாரி 36.4 மீட்டர் தூரத்தில் இருந்து கோல் அடித்தது மிரளச்செய்தது. அணியின் நட்சத்திர வீரரான மெண்டோஸா இந்த தொடரில் 12 கோல்கள் அடித்துள்ளார். மேலும் மற்றொரு வீரரான ஜிஜி கடைசியாக ஆடிய 4 ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இவர்கள் இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை பெறலாம். சஸ்பெண்ட் காரணமாக கடந்த ஆட்டத்தில் பங்கேற்காத எலானோ புளுமர் இன்று களமிறங்குவதால் சென்னை அணி கூடுதல் பலம் பெறும்.

காயத்தால் அவதி

நடப்பு சாம்பியனான கொல்கத்தா கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேற முயற்சிக்கும். அந்த அணியின் கேப்டன் போர்ஜா பெர்ணாண்டஸ் முதல் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் காயம் அடைந்தார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம் தான்.

இதேபோல் முன்கள வீரரான நாடோவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவரும் களமிறங்குவது கடினம் தான். நட்சத்திர வீரரான போஸ்டிகா காயம் காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு பிறகு தற்போது தான் அணியில் இணைந்துள்ளார். அவர் இன்று களமிறக்கப்படுவது பயிற்சியாளர் ஹபாஸ் எடுக்கும் முடிவில் தான் உள்ளது.

முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ள நிலையிலும் ஹுமி, ஷமீக் டுட்டி, காவிலன், டிரி ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும். இவர்கள் இந்த சீசனில் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி தொடர்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்ராஸி கூறும்போது, "கொல்கத்தா மிகவும் சிறந்த அணி. சொந்த இடத்தில் விளையாடுவதால் 60 முதல் 70 ஆயிரம் ரசிகர்களின் ஆதரவு அவர்களுக்கு உள்ளது. அதனால் நாளை (இன்று) வரை காத்திருப்போம். நிதானமாக இருக்கவே விரும்புகிறேன். ஆனால் கடைசி வரை அப்படி இருக்க முடியுமா என்று தெரியவில்லை. போட்டி முடிந்ததும் பேசுவோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in