

பாரிஸ் நகரில் கடந்த வாரம் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், டென்னிஸ் உலகில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் செக் நாட்டு வீராங்கனையான பார்பரா கிரெஜிகோவா. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்பு டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 33-வது இடத்தில் இருந்த அவர், இப்போது முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
செக் நாட்டில் உள்ள இவான்சிஸ் நகரில் 1995-ம் ஆண்டில் பிறந்த கிரெஜிகோவா, டென்னிஸ் விளையாட்டில் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம், முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான ஜானா நவோத்னா. தனது 18 வயது முதல் புற்றுநோயால் ஜானா நவோத்னா இறக்கும்வரை அவரிடம் பயிற்சி பெற்றுள்ளார் கிர்ஜிகோவா. அவரிடம் பெற்ற பயிற்சியால், ஆரம்பத்தில் பல இரட்டையர் பட்டங்களைப் பெற்றுள்ள கிரெஜிகோவா, இப்போது ஒற்றையர் பிரிவிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
தனது வெற்றியை ஜானா நவோத்னாவுக்கு காணிக்கையாக்குவதாக கூறும் கிரெஜிகோவா, ”டென்னிஸ் போட்டியை எப்போதும் ரசித்து ஆடவேண்டும். கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வெல்வதை லட்சியமாக கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் கடைசி சந்திப்பில் நவோத்னா சொன்ன வார்த்தைகள். அதை இப்போது நிறைவேற்றிவிட்டேன்” என்கிறார்.
கடந்த ஆண்டுவரை டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 100-வது இடத்துக்கு மேல் இருந்துவந்த கிரெஜிகோவா, 2020-ல் தான் முதல் 100 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். 2014-ம் ஆண்டுமுதல் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் 14 முறை இவர் தோல்வியடைந்துள்ளார். இப்படி கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கு தகுதி பெறவே போராடிக் கொண்டிருந்தவர், இப்படி தடதடவென முன்னேறி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றிருப்பது, ‘முயன்றால் முடியாதது எதுவும் இல்லை’ என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.