

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி என்று நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிஸன் கூறியுள்ளார்.
இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களால் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. தொடர் விக்கெட்டுகள் சரியவே மொத்தம் 217 ரன்களுக்குத் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி நிறைவு செய்தது. இதில் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிஸன் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டு்களை வீழ்த்தினார். இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் விக்கெட்டும் அடக்கம்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் ஜேமிஸன், "அவர் உலகத்தரமான பேட்ஸ்மேன். அப்படியான வீரர்கள் பெரிய தவறுகள் செய்ய மாட்டார்கள். அந்த விதத்தில் அவரது விக்கெட்டை எடுத்ததில் மகிழ்ச்சியே. இந்திய அணி பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய பங்கு கோலிக்கு உண்டு. அவரை சீக்கிரமே ஆட்டமிழக்கச் செய்தது எங்களுக்குச் சாதகமாக அமைந்தது.
பந்தை ஸ்விங் செய்து அவருக்குச் சிரமத்தை ஏற்படுத்தி பின்பு அவரது விக்கெட்டை வீழ்த்தியது அன்றைய நாளில் எங்களுக்குச் சிறப்பான தொடக்கமாக இருந்தது. மேலும், அவரது விக்கெட்டை வீழ்த்தும் முறையில் ஒரு குறிப்பிட்ட வழிமுறை இருக்கலாம். ஆனால் அது குறித்தெல்லாம் நாங்கள் அதிகம் விவாதிக்கவில்லை. அவர் ஆட்டமிழந்த பந்து சற்று நின்று அவரை நோக்கிச் சென்றது. இதெல்லாம் பந்துவீச்சாளரின் கட்டுப்பாட்டிலும் இல்லை. பேட்டிங் ஆடுபவருக்கும் மிகக் கடினம். அவருக்கு மட்டுமல்ல. யாராக இருந்தாலும்" என்று கூறியுள்ளார்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.