

இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கின் மறைவைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர்.
’பறக்கும் சீக்கியர்' என்று அழைக்கப்பட்ட மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் ஆவார்.
இவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் மீண்டார். இந்த நிலையில் கரோனாவுக்குப் பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 91.
மில்கா சிங்கின் மறைவு விளையாட்டு வீரர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும் மில்கா சிங்கின் மறைவுக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் மில்கா சிங்கின் மறைவையொட்டி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர்.
மில்கா சிங்கின் மறைவு குறித்து விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் கனவுகளைக் கைவிடாதீர்கள். அமைதியாக ஓய்வெடுங்கள் மில்கா சிங். நீங்கள் எப்போதும் நினைவுகூரப்படுவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.