சுவிட்சர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி

சுவிட்சர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி
Updated on
1 min read

யூரோ கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணியை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி அணி.

யூரோ கால்பந்து தொடரில் இத்தாலியின் ரோம் நகரில் நேற்று ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இத்தாலி-சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. 20-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் கேப்டன் ஜார்ஜியோ சியெலினி கோல் அடித்தார்.ஆனால் பந்து அவரது கையில் பட்டிருந்ததால் அது மறுக்கப்பட்டது. 26-வது நிமிடத்தில் இத்தாலி முதல் கோலை அடித்தது. டொமினிகோ பெரார்டி உதவியுடன் பந்தை பெற்ற மானுவல் லோகடெலி கோல்கம்பத்தின் மையப்பகுதி அருகே இருந்து கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது.

52-வது நிமிடத்தில் நிக்கோலா பரெல்லா உதவியுடன் பந்தை பெற்ற மானுவல் லோகடெலி பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்துஇலக்கை நோக்கி உதைக்க கோல் வலையின் வலது கார்னரை பந்து துளைத்தது. சுவிட்சர்லாந்து அணி பதில் கோல் அடிக்க முயன்ற போதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடமே இருந்த நிலையில் இத்தாலி வீரர் சிரோ இம்மொபைல் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அற்புதமாக கோல் அடித்து அசத்தினார். முடிவில் இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் துருக்கியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் இத்தாலி ‘ஏ’ பிரிவில் 6 புள்ளிகளுடன் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் உக்ரைன் - வட மாசிடோனியா அணிகள் மோதின. இதில் உக்ரைன் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உக்ரைன் அணி சார்பில் 29-வது நிமிடத்தில் ஆண்ட்ரி யர்மோலென்கோவும், 34-வது நிமிடத்தில் ரோமன் யாரெம்சுக்கும் கோல் அடித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in