வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்? - தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து முதல் டெஸ்டில் இன்று மோதல்

வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்? - தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து முதல் டெஸ்டில் இன்று மோதல்
Updated on
2 min read

தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் பாக்ஸிங் டே நாளான இன்று டர்பனில் தொடங்குகிறது.

குக் தலைமையிலான இங்கி லாந்து அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் டர்பனில், இந்திய நேரப்படி இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என தோல்வியை சந்தித்தது. அதேவேளையில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 0-2 என தோல்வி கண்டது.

தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும், இங்கிலாந்து அணி மந்தமாக செயல்படும் ஆடுகளத்திலும் தோல்விகளை சந்தித்த நிலையில் தற்போது வேகப்பந்து வீச்சு ஆடுகளத்தில் இரு அணிகளும் மோதுகின்றன.

இங்கிலாந்து அணியில் வேகப் பந்து வீச்சாளர் ஆண்டர்சன் காயம் காரணமாக களமிறங்கவில்லை. ஸ்விங் பந்தில் சிறப்பாக செயல்படக்கூடிய அவர் விளையாடாதது இங்கிலாந்து அணிக்கு சரிவு தான். அதேவேளையில் இந்திய தொடரில் காயம் அடைந்த ஸ்டெயின் முழு உடல் தகுதியுடன் களமிறங்குகிறார். இது தென் ஆப்பிக்க அணிக்கு வலுசேர்க்கும்.

இங்கிலாந்து அணி இரு பயிற்சி ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டது. மாறாக இந்திய தொடரில் பேட்டிங்கில் ஜொலிக்காத தென் ஆப்பிரிக்க வீரர்கள் உள்ளூரில் நடைபெற்ற 4 நாட்கள் போட்டியிலும் இழந்த பேட்டிங்கை பெறும் வகையில் செயல்படவில்லை. டெம்பா பவுமா மட்டுமே அரை சதம் அடித்தார். டி வில்லியர்ஸ், டு பிளெஸ்ஸி ஆகியோருக்கு உள்ளூர் ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.

போட்டி தொடர்பாக தென் ஆப்பிரிக்க கேப்டன் ஆம்லா கூறும்போது, "ஆட்டத்தை சிறப்பான முறையில் தொடங்க விரும்புகிறோம். இந்திய தொடரில் சிறப்பாக செயல்படாததால் இந்த தொடரை முக்கியமானதாக கருதுகிறோம். எங்களை பொறுத்தவரையில் எதிரணியில் எந்த பந்து வீச்சாளர் இடம்பெறுகிறார் என்பது பற்றி கவலை இல்லை, மேலும் அது எங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. நாங்கள் எங்களது சொந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. அதை அணியில் உள்ள எல்லோரும் எதிர்பார்த்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்க அணி டர்பன் மைதானத்தில் 1992ம் ஆண்டுக்கு பிறகு 21 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 6 தோல்விகளை பதிவு செய்துள்ளது. 6 ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இங்கிலாந்து அணி டர்பனில் தோல்வியை சந்தித்ததில்லை. அந்த அணி இங்கு 3 டெஸ்டை டிரா செய்துள்ளது. 2009-2010ல் நடைபெற்ற ஆட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

இருஅணிகளுமே வேகப்பந்து வீச்சை நம்பியே களம் காணும் நேரத்தில் பேட்டிங்கில் தொடக்க ஜோடியாக யார் களமிறங்குவார்கள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இங்கிலாந்து கேப்டன் குக்குடன் கடந்த 2012ம் ஆண்டு முதல் தொடக்க வீரர்களாக இதுவரை 7 பேர் களமிறங்கியுள்ளனர். 8வது நபராக இன்று அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்குகிறார். அவருக்கு இன்றைய ஆட்டம் தான் டெஸ்டில் அறிமுக போட்டியாகும். தென் ஆப்பிரிக்க அணியில் ஆம்லாவுடன் டீன் எல்கர் அல்லது வான் சைல் களமிறங்குவார் என தெரிகிறது. வான் சைல், இந்திய தொடரில் 5 இன்னிங்ஸில் வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகப்பந்து வீச்சில் இரு அணிகளும் பலம் வாய்ந்தது என்பதால் அவற்றை சமாளித்து எதிர்கொள்ளும் விதத்தில் தொடக்க ஜோடியின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக் கும். இரு அணியிலும் விக்கெட் கீப்பராக பேட்ஸ்மேன்களே செயல்பட உள்ளனர். இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸூம் விக்கெட் கீப்பராக களமிறங்குகின்றனர்.

சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி, பேட்டிங்கிலும் கைகொடுக்கக்கூடியவர். இது இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலம். தென் ஆப்பிரிக்க அணி டேன் பியட்டை சுழலில் களமிறக்கக்கூடும்.

அணி விவரம்(உத்தேசமாக)

தென் ஆப்ரிக்கா:

ஆம்லா (கேப்டன்), டீன் எல்கர், வான் சைல், டு பிளெஸ்ஸி, டி வில்லியர்ஸ், டெம்பா பவுமா, டுமினி, டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல், ரபாடா, கைல் அபாட் அல்லது டேன் பியட்.

இங்கிலாந்து:

குக் (கேப்டன்), அலெக்ஸ் ஹேல்ஸ், நிக் காம்ப்டன், ஜோ ரூட், ஜேம்ஸ் டெய்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவன் பின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in