

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தை எளிதாக வெல்லும் என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் கருத்து கூறியுள்ளார்.
சவுத்தாம்டன் நகரில் வரும் 18-ம் தேதி இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி நடக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் இறுதிப் போட்டி இது. இந்தப் போட்டிக்கான அணிகள் இரண்டு தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் நியூஸிலாந்து அணி, சில நாட்களுக்கு முன்புதான் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றது. இருந்தாலும் இந்திய அணி வெல்லும் என்றே பெய்ன் கூறியுள்ளார்.
இதுகுறித்துக் கருத்து கூறியுள்ள ஆஸி. அணியின் கேப்டன் டிம் பெய்ன், "என் கணிப்பு, இந்திய அணி வீரர்கள் அவர்கள் சிறந்த ஆட்டத்துக்குக் கொஞ்சம் பக்கத்தில் ஆடினாலே மிக எளிதாக வென்றுவிடும் என்பதே. நியூஸிலாந்து திறமையான அணிதான். ஆனால், கொஞ்சம் யதார்த்தமாக யோசிக்க வேண்டும். அவர்கள் எதிர்த்து ஆடிய இங்கிலாந்து அணி, ஆஷஸ் தொடரில் நாம் பார்க்கப்போகும் அணியை விட வித்தியாசமானது. அதை மனதில் வைத்தால் இது இந்திய அணியை விட வலிமையான அணி கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில், இந்திய அணி அந்த அணியை 2-1 என்கிற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது நினைவுகூரத்தக்கது.