தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்க உள்ளூர் போட்டியில் கவனம் செலுத்தும் யுவராஜ்சிங்

தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்க உள்ளூர் போட்டியில் கவனம் செலுத்தும் யுவராஜ்சிங்
Updated on
2 min read

டி 20 உலககோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறும் முயற்சி யாக யுவராஜ்சிங் உள்ளூர் போட்டி களில் கவனம் செலுத்த தொடங்கி யுள்ளார். விஜய் ஹஸாரே தொடரில் அவர் 4 ஆட்டத்தில் 243 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி 2011 உலககோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ்சிங். நுரையீரல் புற்று நோயுடன் இந்த தொடரில் பங்கேற்ற அவர் உலககோப்பையை வென்றவுடன் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் பிறகு யுவராஜ்சிங்கின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

2007ல் நடைபெற்ற முதல் டி 20 உலககோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக கிறிஸ் பிராடு வீசிய ஓரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய யுவராஜ்சிங் கடைசியாக இந்திய அணிக்காக 2014-ல் நடைபெற்ற டி 20 உலககோப்பையில் பங்கேற்றார்.

இந்த தொடரில் 6 ஆட்டங்களில் வெறும் 100 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதிலும் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக 21 பந்தில் 11 ரன்கள் தான் எடுத்தார். கடைசி கட்டத்தில் அவரது மந்தமான ஆட்டத்தால் இந்திய அணி குறைந்த ரன்களை இலக்காக கொடுத்து தோல்வியை தழுவ நேரிட்டது.

அதன் பின்னர் இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைப்பது அரிதானது. இந்நிலையில் 34 வயதான யுவராஜ்சிங், மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறும் டி 20 உலககோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வரும் யுவராஜ்சிங் 4 ஆட்டத்தில் 243 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 81 ஆகும். ராஜஸ்தான் அணிக்கு எதிராக 59 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சில சிக்ஸர்களுடன் 78 ரன் எடுத்திருந்தார். மேலும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 93 ரன்கள் விளாசியிருந்தார்.

தற்போது இந்திய அணியில் 5வது இடத்தில் களமிறங்கி வரும் ரெய்னா சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்க தொடரின் போது, ஆட்டத்தை முடித்து வைக்கும் திறன் படைத்த வீரர்கள் அணிக்கு தேவை என்று கேப்டன் தோனி கருத்து தெரிவித்திருந்தார்.

எனவே உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து, தேர்வுக்குழுவினரின் பார்வையை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் யுவராஜ்சிங் களமிறங்கியுள்ளார். இதற்கிடையே இந்திய அணி வரும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டி, மூன்று டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு நாளை மாலை 5 மணி அளவில் டெல்லியில் நடை பெறுகிறது. இதில் தேர்வு செய்யப் படும் வீரர்களே பெரும்பாலும் டி 20 உலககோப்பைக்கான அணியில் இடம் பெறக்கூடும் என கருதப்படுகிறது. இதில் யுவராஜ்சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது நாளை மாலை தெரியவரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in