

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல்ஸ்க்கு சர்வதேச போட்டிகளில் ஒருவருடம் பந்து வீசுவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது.
அவரின் பந்து வீச்சை பரிசோதனை செய்த பின்னர் இந்த அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. 34 வயதான சாமுவேல்ஸ் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் சாமுவேல்ஸின் பந்து வீச்சு விதிமுறைக்கு மாறாக இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பிரிஸ்பனில் உள்ள ஐசிசி அங்கீகாரம் பெற்ற சோதனை மையத்தில் சாமுவேல்ஸின் பந்து வீச்சு கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதில் அவரது முழங்கை 15 டிகிரிக்கு மேல் வளைவது தெரியவந்தது. சாமுவேல்ஸ் மீது ஏற்கெனவே கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் புகார் எழுந்தது. இரண்டு வருடத்துக்குள் 2வது முறையாக புகார் எழுந்துள்ளதால் ஐசிசி விதிமுறைகளின்படி சாமுவேல்ஸ், சர்வதேச போட்டிகளில் ஒரு வருடத்துக்கு பந்து வீசுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.