ஃபிரெஞ்சு ஓபனை வென்ற ஜோகோவிச்: சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண் பாராட்டு

ஃபிரெஞ்சு ஓபனை வென்ற ஜோகோவிச்: சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண் பாராட்டு
Updated on
1 min read

ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த ஃபிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற நோவாக் ஜோகோவிச்சை பாராட்டி முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண் இருவரும் ட்வீட் செய்துள்ளனர்.

இது ஜோகோவிச் வெல்லும் இரண்டாவது ஃபிரெஞ்சு ஓபன் பட்டம். நான்கு மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஜோகோவிச் 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்கிற கணக்கில் கிரேக்க நாட்டு வீரர் ஸ்டிஃபானோஸ் ஸிட்ஸிபாஸை வென்றார். ஜோகோவிச் வெல்லும் 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

"என்ன ஒரு இறுதிப் போட்டி. தலை வெடித்து விட்டது. கடினமான சில ஆட்டங்களை ஆடிய பின்னும் நோவாக் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். உடல் ரீதியாக வலிமை, நுட்பத்தில் கூர்மை, மன ரீதியாகவும் உறுதியாக இருந்தார்.

அப்படித்தான் அவர் இறுதியில் வென்றுள்ளார். ஸிட்ஸிபாஸும் அற்புதமாக ஆடினார். வரும் வருடங்களில் இவரும் பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வெல்வார் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்" என்று டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.

விவிஎஸ் லக்‌ஷ்மண், "19வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோகோவிச்சுக்கு வாழ்த்துக்கள். பின்னடைவுக்குப் பின் முந்திச் சென்று வென்றது அவரது அபார தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் காட்டியது. உண்மையான சாம்பியன்" என்று ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகோவிச்சுக்கும் நடப்பு சாம்பியன் நடாலுக்கும் இடையே நடந்த அரையிறுதிப் போட்டியும் நான்கு மணி நேரங்களைக் கடந்து சென்றது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in