Published : 13 Jun 2021 11:49 AM
Last Updated : 13 Jun 2021 11:49 AM

விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்: ஸ்தம்பித்துப் போன கால்பந்து ரசிகர்கள்

டென்மார்க் - பின்லாந்து இடையேயான கால்பந்து ஆட்டத்தில் டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டின் எரிக்சன் (29) மைதானத்திலேயே மயங்கி விழுந்தது கால்பந்தாட்ட ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 அணிகள் கலந்துகொள்ளும் யூரோ கால்பந்து தொடர் ஜூன் 11-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரின் டென்மார்க் - பின்லாந்து ஆகிய நாடுகளுக்கான இடையே போட்டி நேற்று நடந்தது. ஆட்டத்தின் முதல் பாதி நேர முடிவின் இறுதியில் டென்மார்க் நட்சத்திர வீரர் கிறிஸ்டின் எரிக்சன் மைதானத்தில் ஓடிக் கொண்டிருக்குபோது திடீரென சாய்ந்து ஒரு பக்கமாக மைதானத்தில் விழுந்தார். எரிக்சன் பந்து பட்டு தட்டுமாறி விழுந்திருக்கிறார் என்று சக வீரர்கள் ஆட்டத்தைச் சில நொடிகள் தொடர்ந்து கொண்டிருக்க, கிறிஸ்டின் எந்தவித அசைவும் இல்லாமல் மைதானத்தில் படுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆட்டம் நிறுத்தப்பட்டு, சக வீரர்கள் கிறிஸ்டினைச் சூழ்ந்துகொண்டு அவரை எழுப்ப முயன்றனர். ஆனால், கிறிஸ்டின் எழவில்லை. அச்சம் கொண்ட வீரர்களும், நடுவர்களும் மருத்துவக் குழுவை அழைக்க அவர்கள் உடனடியாக வந்து கிறிஸ்டினுக்கு மைதானத்திலேயே சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

கிறிஸ்டினின் சுவாசம் நின்றதை உணர்ந்து அவருக்கு சிபிஆர் சிகிச்சை எனப்படும் இதயத்தை இயங்கச் செய்வதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சக வீரர்கள் மருத்துவக் குழுவை அரண் போல சூழ்ந்து கொண்டனர். மேலும் கண்ணீருடன் பிரார்த்தனையிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

மைதானத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத ரசிகர்கள், கிறிஸ்டினுக்கு என்ன ஆயிற்று என்று அழத் தொடங்கிய காட்சிகள் உலக கால்பந்து ரசிகர்களையும் சோகத்தில ஆழ்த்தியது.

தொடர்ந்து அரை மணி நேரமாக கிறிஸ்டினுக்கு மைதானத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு சிறிது நினைவு திரும்பிய நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இக்காட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. உலகம் முழுவதிலிருந்து கால்பந்து வீரர்கள் கிறிஸ்டின் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பின்னர் மருத்துவமனையில் கிறிஸ்டின் உடல்நிலை நலமாக உள்ளது என்ற செய்தி வந்தபின்னர் மைதானத்தில் ரசிகர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர்.

பின்லாந்து ரசிகர்களும், டென்மார்க் ரசிகர்களும் கிறிஸ்டினின் பெயரை மாறி மாறி மைதானத்தில் சத்தமாக அழைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கிறிஸ்டின் உடல்நிலை நலமாக உள்ளதைத் தொடர்ந்து பின்லாந்து - டென்மார்க் இடையேயான ஆட்டம் தொடங்கியது. இதில். 0- 1 என்ற கணக்கில் பின்லாந்து அணி வெற்றி பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x