

யூரோ கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் துருக்கியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இத்தாலி அணி.
ரோம் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்த இத்தாலி - துருக்கி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இத்தாலி அணி பலமுறை கோல் அடிக்க முயன்றபோதும் அதற்கு பலன் கிடைக்காமல் போனது.
53வது ஆட்டத்தில் இத்தாலி வீரர் டொமினிகா பெரார்டி அடித்த கிராஸை துருக்கி அணியின் டிபண்டர் டெமிரல் தடுக்க முயன்றார். ஆனால் பந்து அவர் மீது பட்டு சுய கோலாக மாறியது.
யூரோ கால்பந்து வரலாற்றில் தொடக்க ஆட்டத்தில் முதல் கோல் சுய கோலாக அடிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். டெமிரலின் சுய கோலால் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 66-வது நிமிடத்தில் இத்தாலி தனது 2-வது கோலை அடித்தது. லியோனார்டோ ஸ்பினசோலா இலக்கை நோக்கி அடித்த பந்தை துருக்கி அணியின் கோல்கீப்பர் உகுர்கான் காகீர் தடுத்தார். ஆனால் அவர் மீது பட்டு திரும்பி வந்த பந்தை அருகில் நின்ற சிரோ இம்மொபைல் கோலாக மாற்றினார்.
79-வது நிமிடத்தில் துருக்கி அணியின் வலுவிழந்த தற்காப்பு வளையத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட லோரென்சோ இன்சைன் பந்தைஅற்புதமாக கர்லிங் செய்து கோல் வலைக்குள் திணிக்க இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.