

ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ரஃபேல் நாடாலைத் தோற்கடித்து நோவாக் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இது குறித்துப் பேசியிருக்கும் ஜோகோவிச், "ஃபிரெஞ்சு ஓபனில் நான் விளையாடிய சிறந்த ஆட்டம் இதுதான். இதுவரை நான் விளையாடியதில் மிகச் சிறந்த மூன்று போட்டிகளில் இதுவும் ஒன்று. டென்னிஸின் தரமும், களிமண் தரையில் அதிக வெற்றிகளைப் பெற்ற, கடந்த 15 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த எனது மிகப்பெரிய போட்டியாளரோட வெற்றி பெற்றதும் விசேஷமானது.
ஒவ்வொரு முறை அவருக்கெதிராக ஆடும் போது இந்த நபருக்கு எதிராக ஜெயிக்க வேண்டும் என்றால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைப் போல முயற்சிக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும்" என்று ஜோகோவிச் பேசியுள்ளார்.
4 மணி நேரம் 11 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் 3-6, 6-3, 7-6(4), 6-2 என்கிற கணக்கில் நடாலை வீழ்த்தினார் ஜோகோவிச். இது களி மண் தரையில் ஜோகோவிச் பெறும் 35வது தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபிரெஞ்சு ஓபனில் இரண்டு முறை நடாலை தோற்கடித்த ஒரே வீரரும் ஜோகோவிச்சே. இதுவரை ஃபிரெஞ்சு ஓபனில் 105 வெற்றிகளையும் மூன்றே மூன்று தோல்விகளையும் மட்டுமே நடால் பெற்றுள்ளார்.
செர்பிய நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச், கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஸ்டெஃபானோஸை ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளார்.