Last Updated : 11 Jun, 2021 03:12 AM

 

Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஒருநாள் போட்டியில் முதல் வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி, இன்றைக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு மிகச் சிறந்த அணியாக உள்ளது. நூற்றுக்கணக்கான ஒருநாள் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி அடித்தளமிட்ட நாள் ஜூன் 11, 1975. அன்றைய தினம்தான் இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

1975-ம் ஆண்டில் நடந்த முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இந்த முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் இந்தியாவிடம் தோற்ற அணி கிழக்கு ஆப்பிரிக்கா. கென்யா, உகாண்டா, தான்சானியா சாம்பியா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து உருவான அணியாக அன்றைய காலகட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்கா இருந்தது.

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரில் நடந்த இந்தப் போட்டி 60 ஓவர்களைக் கொண்டதாக இருந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிழக்கு ஆப்பிரிக்க அணி, 55.3 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய பிஷன்சிங் பேடி, 12 ஓவர்களில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மதன்லால் 3 விக்கெட்களையும், அபித் அலி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி, விக்கெட் எதையும் இழக்காமலேயே 29.5 ஓவர்களில் 123 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான சுனில் கவாஸ்கர் 65 ரன்களையும், பரூக் இன்ஜினீயர் 54 ரன்களையும் குவித்தனர்.

முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பெற்ற ஒரே வெற்றி இது என்பதும், இப்போட்டிக்கு பிறகு ஒருநாள் போட்டியில் 2-வது வெற்றியை பதிவு செய்ய இந்தியா 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x