

முன்னாள் இந்தியக் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் குத்துச்சண்டைப் போட்டியை பிரபலப்படுத்தியதில் சிங்குக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த டிங்கோ சிங், செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அவருக்கு வயது 42. கடந்த வருடம் மே மாதம் கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து டிங்கோ சிங் மீண்டார். கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த வருடம் இம்பாலிலிருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு வந்து சென்றார்.
இந்தியாவின் மிகச் சிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவராகப் போற்றப்படும் டிங்கோ சிங், 1998 பேங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றார். டிங்கோ சிங்குக்கு அர்ஜுனா விருதையும், பதம்ஸ்ரீ விருதையும் இந்திய அரசாங்கம் வழங்கி கவுரவித்தது.
இவரது மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, "டிங்கோ சிங் விளையாட்டுலகின் சூப்பர் ஸ்டார். மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர். பல விருதுகளைப் பெற்று, அந்தப் போட்டியை பிரபலப்படுத்த முக்கியப் பங்காற்றியவர். அவரது மறைவுக்கு வருந்துகிறேன். அவர் குடும்பத்துக்கும், அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் என் இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று பகிர்ந்துள்ளார்.
இந்திய விளையாட்டு ஆணையம், ஆறு முறை உலக சாம்பியனான மேரி கோம், விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் எனப் பலரும் டிங்கோ சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.