Last Updated : 10 Jun, 2021 03:11 AM

 

Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

விளையாட்டாய் சில கதைகள்: கடைசி போட்டியில் அழுத சச்சின்

இந்தியாவின் கம்பீரமான ஆண்களில் ஒருவராக கருதப்படுபவர், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில் ஆண்கள் அழுவதைப் பற்றி வித்தியாசமான கருத்து ஒன்றை அவர் தெரிவித்துள்ளார்.

”பொதுவாக எல்லோரும் ஆண்கள் அழக்கூடாது என்பார்கள். ஆனால் என்னைக் கேட்டால் ஆண்கள் அழுவதில் தவறில்லை. தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த, ஆண்கள் தாராளமாக அழலாம்” என்பது சச்சின் டெண்டுல்கரின் கருத்தாக உள்ளது.

இதுபற்றி மேலும் கூறும் சச்சின், “ஆண்கள் அழக்கூடாது. அப்படி அழும் ஆண்கள் பலவீனமானவர்கள் என்று சொல்லிச் சொல்லி நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். நானும் இதை நம்பியே வளர்ந்தேன். இந்தச் சூழ்நிலையில் ஆண்கள் அழக்கூடாது என்று நான் நினைத்தது தவறு என்பதை ஒரு கட்டத்தில் நான் உணர்ந்தேன். 2013-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதியை நான் இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். நான் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற நாள் அது. நீண்ட நாட்களாக அதுபற்றி நான் நினைத்திருந்தாலும் அன்றைய நாளுக்காக என்னை நான் தயார்படுத்திக் கொள்ளவில்லை.

அன்றைய தினம் மைதானத்துக்குள் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் ஏதோ ஒரு சோகம் என்னை அழுத்தியது. என் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருவதை நினைக்கும்போது, என் தொண்டைக்குள் ஏதோ அடைத்துக்கொள்வதைப் போல உணர்ந்தேன்.

அந்த நேரத்தில் பல விஷயங்கள் என் தலையை அழுத்தின. என்னால் என் உணர்ச்சிகளைகட்டுப்படுத்த முடியவில்லை. அதை கட்டுப்படுத்துவதற்காக நான் போராடவும் இல்லை. கண்ணீரால் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன். அந்த சமயத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில் என் மனதில் அமைதி பரவியது. நான் வலுப்பெற்றதைப் போல் உணர்ந்தேன். நான் பெற்ற எல்லாவற்றுக்கும் நன்றியுள்ளவனாக உணர்ந்தேன். நான் முழுமையான ஆணாக இருப்பதை உணர்ந்தேன். உங்கள் கண்ணீரை வெளிப்படுத்துவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. உங்களை வலிமைப்படுத்தும் ஒரு விஷயத்தை நீங்கள் எதற்காக மறைத்து வைக்க வேண்டும்? கண்ணீரை ஏன் மறைக்கவேண்டும்?” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x