Last Updated : 09 Jun, 2021 07:28 PM

 

Published : 09 Jun 2021 07:28 PM
Last Updated : 09 Jun 2021 07:28 PM

ஐசிசி தொடர்களில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியாவின் தொடர் தோல்வி: ஒரு பார்வை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

வரும் ஜூன் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் பதிப்பில் நடக்கும் முதல் இறுதிப் போட்டி இது. ஏற்கெனவே நியூஸிலாந்து அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஆடி வருவதன் மூலம் இதற்கான பயிற்சியைப் பெற்று வருகிறது. இந்திய வீரர்களும் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விரு அணிகளும் கடந்த 18 ஆண்டுகளில், ஐசிசி தொடர்களில் விளையாடியபோது, அதில் நியூஸிலாந்து அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்திருக்கிறது. கடைசியாக 2003ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில், சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்து அணியைத் தோற்கடித்தது. இதன் பிறகு எந்த ஐசிசி தொடரிலும் இந்தியாவால் வெல்ல முடியவில்லை.

அப்போட்டிகள் பற்றிய ஒரு பார்வை:

2007 டி20 உலகக்கோப்பை : லீக் பிரிவு ஆட்டம்

ஜோஹன்ஸ்பெர்க்கில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 190 ரன்கள் குவித்தது. ப்ரெண்டன் மெக்கல்லம் 45 ரன்களை அடித்திருந்தார். இந்திய அணியால் 20 ஓவர்களில் 180 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 4 விக்கெட்டுகள் எடுத்து வெட்டோரி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2016 டி20 உலகக்கோப்பை, சூப்பர் 10 ஆட்டம்

நாக்பூரில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பாகப் பந்து வீசி முதலில் ஆடிய நியூஸிலாந்து அணியை 126 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது. ஆனால், நாதன் மெக்கல்லம், மிட்சல் சாண்ட்னர் மற்றும் ஈஷ் சோதி ஆகிய மூவரின் சுழலில் சிக்கிய இந்திய அணி வெறும் 79 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

2019 உலகக்கோப்பை அரையிறுதி

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. லீக் பிரிவில் இங்கிலாந்திடம் மட்டுமே தோல்வி கண்டு, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அரையிறுதிப் போட்டி மழையின் காரணமாக இரண்டு நாட்கள் விளையாடப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 239 ரன்களை எடுத்திருந்தது. மழையால் ஆட்டம் தடைப்பட, அடுத்த நாள் இந்திய அணி தனது ஆட்டத்தைத் தொடங்கியது. இதில் ஐந்து ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்த அணியை ரவீந்திர ஜடேஜா மீட்டார். ஆனால் 59 பந்துகளீல் அவர் அடித்த 77 ரன்கள் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2020

நியூஸிலாந்தில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் டெஸ்ட்டை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இழந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்துவீசும்போது சிறப்பான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் சோபிக்காமல் போனது. வெறும் 132 ரன்கள் என்கிற இலக்கை நியூஸிலாந்து எளிதாகக் கடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x