இந்தியாவின் வெற்றிக்கு அஸ்வின் பிரதானமாக இருப்பார்: மாண்டி பனேசர் நம்பிக்கை

இந்தியாவின் வெற்றிக்கு அஸ்வின் பிரதானமாக இருப்பார்: மாண்டி பனேசர் நம்பிக்கை
Updated on
1 min read

நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு அஸ்வினின் பங்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி, இந்தியாவுக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையே சவுதாம்டன் நகரில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் அஸ்வினின் பங்கு என்னவாக இருக்கும் என்பது குறித்து மாண்டி பனேசர் பேசியுள்ளார்.

"நியூஸிலாந்து சிறப்பான அணி. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கான்வே நன்றாக ஆடியிருக்கிறார். அவர்களிடம் சில இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கு எதிராக வீச அஸ்வினே முதல் தேர்வாக இருப்பார். பலர் நினைப்பதை விட நியூஸிலாந்து சிறப்பாக ஆடி வருகிறது. உலகின் முதன்மை அணியைப் போல ஆடி வருகிறது. இந்தியாவுடனான ஆட்டம் சுவாரசியமாக இருக்கப்போகிறது. இந்தியாவுக்கும் எளிதான போட்டியாக இது இருக்காது.

அதே நேரம், வானிலை, நியூஸிலாந்து அணியின் இடது கை பேட்ஸ்மேன்களைப் பார்க்கும்போது இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வினின் செயல்பாடே பிரதானமாக இருக்கும். அவர்தான் இரு அணிகளுக்கும் இடையே வித்தியாசமாக இருக்கப் போகிறார்.

அஸ்வினால் இடது கை பேட்ஸ்மேன்களை எளிதில் வீழ்த்தினால் அந்த அணிக்குப் பிரச்சினை நேரிடும். இல்லையென்றால் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது அழுத்தம் அதிகமாகும். இந்தியாவில் வீசியதைப் போலவே வீசினால் கண்டிப்பாக இந்தியா வலிமையான நிலையில் இருக்கும். அவர்கள் அணியில் டிம் சவுத்தி நன்றாக வீசி வருகிறார்" என்று பனேசர் கருத்து கூறியுள்ளார்.

143 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 200 முறை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in