

பழைய சர்ச்சை ட்வீட்டுகளுக்காக கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஒலி ராபின்ஸனுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும், இங்கிலாந்து பிரதமர் உட்பட சில அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தற்போது இடம்பெற்றிருக்கும் ஒலி ராபின்ஸன், ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்தார். நியூஸிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்திப் பாராட்டும் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 7-8 வருடங்களுக்கு முன், அவரது பதின்ம வயதில், கருப்பினத்தவர்கள், ஆசிய மக்கள், முஸ்லிம்கள், பெண்கள் எனப் பலதரப்பட்ட மக்களையும் கிண்டல் செய்து அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டுகள் பற்றிய சர்ச்சை எழுந்தது.
அவரது ட்வீட்டுகளில் காணப்பட்ட இனவெறி, பாலினப் பாகுபாடு ஆகியவற்றைக் காரணம் காட்டி, அவரை ஒட்டுமொத்தமாக எல்லாவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நீக்கித் தடை விதித்தது. ராபின்ஸன் மன்னிப்பு கேட்டுவிட்டாலும், கொடுத்த தண்டனையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
தற்போது அவருக்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் கலாச்சார மற்றும் விளையாட்டுத் துறைச் செயலர் ஆலிவர் டவ்டன், கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கை அதிகப்படியானது என்று விமர்சித்துள்ளார்.
"ராபின்ஸனின் ட்வீட்டுகள் தவறானவைதான். ஆனால், அவை 10 வருடங்களுக்கு முன்னால் ஒரு பதின்ம வயது இளைஞர் பதிவிட்டவை. இப்போது அவர் முதிர்ச்சி பெற்றுவிட்டார். சரியாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். கிரிக்கெட் வாரியம் அவரை நீக்கியது அதிகப்படியானது" என்று கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்துகளுக்கு பிரதமர் போரிஸ் ஜான்ஸனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த முடிவை வாரியம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
"ராபின்ஸன் பல வருடங்களுக்கு முன் பகிர்ந்த கருத்துகளுக்கான எதிர்ப்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பான தொடக்கத்துக்குப் பின் அவருக்குத் தடை விதித்தது குறித்து நான் வருத்தப்படுகிறேன். இந்த சமூக ஊடகத் தலைமுறையில், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான கடுமையான அறிகுறி இந்த நீக்கம்" என்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்வீட் செய்துள்ளார்.