டெல்லி டெஸ்ட் போட்டி: தோல்வியை தவிர்க்க தென் ஆப்பிரிக்கா போராட்டம்

டெல்லி டெஸ்ட் போட்டி: தோல்வியை தவிர்க்க தென் ஆப்பிரிக்கா போராட்டம்
Updated on
2 min read

டெல்லியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க தென் ஆப்பிரிக்க அணி போராடி வருகிறது. 4-வது நாள் ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 334 ரன்களையும், தென் ஆப்பிரிக்க அணி 121 ரன்களையும் எடுத்தது. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்திருந்தது. கோலி 83 ரன்களுடனும், ரஹானே 52 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

நேற்று காலையில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய வீரர்கள் மின்னல் வேகத்தில் ரன்களைக் குவித்து 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கைல் அபாட் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி விராட் கோலி ஆட்டமிழந்தார். 165 பந்துகளை சந்தித்த அவர், 88 ரன்களைக் குவித்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரிகளும் அடங்கும்.

ரஹானே சாதனை

கோலி அவுட் ஆனதைத் தொடர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ரஹானே ஈடுபட்டார். 3-வது நாள் ஆட்டத்தில் 152 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்த ரஹானே நேற்று வேகமாக ஆடி 54 பந்துகளில் 48 ரன்களைக் குவித்தார். இம்ரான் தகிர், மோர்னே மோர்கல், டேன் பியட் ஆகியோரின் பந்துகளை சிக்சருக்கு விரட்டிய ரஹானே 206 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் ஒரே போட்டியில் 2 சதங்களை அடித்த 5-வது இந்திய வீரர் என்ற சாதனையை ரஹானே படைத்துள்ளார். இதற்கு முன்னர் விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (3 முறை) ராகுல் திராவிட் (2 முறை), விராட் கோலி ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். ரஹானேவுக்கு துணையாக ஆடிய விருதிமான் சகா 23 ரன்களை எடுத்தார்.

ரஹானே சதம் எடுத்ததும் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களாக இருந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் மோர்னே மோர்கல் 3 விக்கெட்களையும், கைல் அபாட், இம்ரான் தகிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தடுப்பாட்டம்

வெற்றி பெற 481 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை ஆடவந்தது. இந்த ஸ்கோரை எடுப்பது கடினம் என்பதை உணர்ந்ததால் முடிந்தவரை அவுட் ஆகாமல் இருந்து போட்டியை டிரா செய்யும் முயற்சியில் அந்த அணியின் வீரர்கள் ஈடுபட்டனர்.

ஸ்கோர் 5 ரன்களை எட்டுவதற்குள் அஸ்வினின் பந்துவீச்சில் எல்கர் (4 ரன்கள்) அவுட் ஆனபோதும் அடுத்துவந்த வீரர்கள் தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். ஒருபக்கம் கொடாக்கண்டர்களாக விக்கெட்களை பறிகொடுக்காமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஆட, மறுபக்கம் விடாக்கண்டர்களாக இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்த போராடினர்.

ஒரு பக்கம் ஸ்டம்புக்கு முன் மலைபோல் நின்று ஆம்லா தடுப்பாட்டத்தில் ஆட, மறுபக்கம் அவருக்கு துணையாக பவுமாவும் நிலைத்து ஆடினார். ரன்களை எடுக்காவிட்டாலும் இந்த ஜோடியை வீழ்த்த இந்திய வீரர்கள் கடுமையாக போராடவேண்டி வந்தது. நீண்டநேர முயற்சிக்கு பிறகு அஸ்வினின் பந்தில் போல்ட் ஆகி பவுமா அவுட் ஆனார். ஆம்லா - பவுமா ஜோடி 38.4 ஓவர்கள் விளையாடி வெறும் 45 ரன்களை மட்டுமே சேர்த்து ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இதில் பவுமா 117 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்களை எடுத்தார்.

டிவில்லியர்ஸ் நிதான ஆட்டம்

பவுமா அவுட் ஆனதைத் தொடர்ந்து டிவில்லியர்ஸ் ஆட வந்ததும் ரன் மழை பொழியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 50, 100 மற்றும் 150 ரன்களை அசுரவேகத்தில் அடித்து சாதனை படைத்த டிவில்லியர்ஸும் நேற்று ரசிகர்களின் பொறுமையை சோதித்தார். 91 பந்துகளை எதிர்கொண்ட டிவில்லியர்ஸ், ஒரு பவுண்டரியைக் கூட அடிக்காமல் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். எதிர்ப்புறத்தில் அவரைவிட அதிகமாக ரசிகர்களை சோதித்த ஆம்லா 207 பந்துகளில் 23 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 72 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று அந்த அணி வெற்றி பெற இன்னும் 409 ரன்களை எடுக்க வேண்டும். அது கடினம் என்பதால் விக்கெட்களை பறிகொடுக்காமல் தோல்வியில் இருந்து தப்பும் முயற்சியிலேயே அந்த அணியின் வீரர்கள் ஈடுபடுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவின் தடுப்பாட்டத்தை மீறி இந்தியாவை வெற்றிபெற வைப்பது பந்துவீச்சாளர்கள் கையில் இருக்கிறது.

முரளி விஜய்க்கு அபராதம்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய்க்கு போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் மோர்னே மோர்கல் வீசிய பந்தில் விலாஸிடம் கேட்ச் கொடுத்து விஜய் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது தனது பேட்டில் பந்து படவில்லை என்று நடுவர் குமார் தர்மசேனாவிடம் விஜய் தெரிவித்தார்.

அவரது இந்த நடவடிக்கைக்காக போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in