Published : 30 Dec 2015 04:29 PM
Last Updated : 30 Dec 2015 04:29 PM

பதிவுகள் 2015: திறமையால் தெறிக்கவிட்டு தேசத்துக்குப் பெருமை சேர்த்த சானியா

பெண்கள் இரட்டையர் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பெற்ற விம்பிள்டன் கோப்பை, அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்; விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது; இந்திய கிரிக்கெட் கிளப்பில் (சிசிஐ) வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து; சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் 2015-ம் ஆண்டின் சிறந்த ஜோடியாக சானியா மிர்சா- மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தேர்வு. இவை அனைத்தும் 2015-ம் ஆண்டில் டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா வசமாகி இருக்கிறது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கலப்பு இரட்டையர், மகளிர் இரட்டையர் ஆகியவற்றில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சானியா. மகளிர் ஒற்றையர் பிரிவில் நான்கு டபிள்யூ.டி.ஏ. (மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி) பட்டங்களையும், மகளிர் இரட்டையர் பிரிவில் 47 டபிள்யூ.டி.ஏ. பட்டங்களையும் வென்று சாதித்திருக்கிறார். 2004-ல் அர்ஜூனா விருதையும், 2006-ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். தெலங்கானா மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிடர்; ஐக்கிய நாடுகளின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதர் என்று பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சானியா.

சாதனை ஜோடி சானியா - ஹிங்கிஸ்

சானியாவின் பெண்கள் இரட்டையர் ஜோடியில் 70-வது நபர் மார்ட்டினா ஹிங்கிஸ். இப்போதைய கலப்பு இரட்டையர் பிரிவின் சக வீரர், பிரேசிலைச் சேர்ந்த பெலோ ஹொரிசாண்டே. ஒற்றையர் பிரிவில் இருந்து விலகிய பின்னர், இரட்டையர் பிரிவில் தனது சக வீரர்/ வீராங்கனையைத் தேர்வு செய்வதிலும், அவர்களுடனேயே தொடர்ந்து விளையாடுவதிலும் கவனமாக இருக்கிறார் சானியா.

இந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் பட்டம் வென்ற சானியா - ஹிங்கிஸ் ஜோடி, அதன் பிறகு கடைசியாக நடைபெற்ற 22 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் சானியா ஜோடி 62 ஆட்டத்தில் விளையாடி 55-ல் வெற்றி வாகை சூடியிருக்கிறது.

2015 வெற்றி விவரங்கள்

* சிங்கப்பூரில் நடந்த டபிள்யூ.டி.ஏ. ஆண்டு இறுதிக்கான சாம்பியன்கள் போட்டியில் இரட்டையர் பிரிவில் மார்டினாவுடன் இணைந்து ஆடி வெற்றி வாகை சூடினார் சானியா.

* கலிஃபோர்னியாவில் நடக்கும் பி.என்.பி. பாரிபாஸ் ஓப்பனான 'இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்' போட்டியில் வெற்றி.

* மியாமி, ஃப்ளோரிடாவில் நடக்கும் 'மியாமி அமெரிக்க ஓப்பனில்' பட்டம்.

* ஹுபேய், சீனாவில் நடக்கும் 'வூஹான் ஓப்பனில்' பட்டம்.

* சார்லஸ்டன், அமெரிக்கா 'ஃபேமிலி சர்க்கிள் கப்' போட்டியில் வெற்றி. (2011-ல் ரஷிய வீராங்கனை எலினா வெஸ்னினாவுடன் இணைந்து இதே பட்டத்தை வென்றிருந்தார்).

* குவாங்ஸுவில் நடைபெறும் 'சீன ஓப்பன்' பட்டம். (இதே பட்டத்தை 2010-ல் ரோமானிய வீராங்கனை எடினா கேலோவிட்ஸுடன் இணைந்து பெற்றார்).

* பெய்ஜிங்கில் நடக்கும் 'சீன ஓப்பன்' பட்டம். (2013-ம் ஆண்டிலும் இதே பட்டத்தை வென்றிருந்தார்).

இரட்டையர் பிரிவு

* ஹிங்கிஸுடன் இணைந்து அமெரிக்க ஓப்பன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களைப் பெற்றதன் மூலம் இரட்டையர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சானியா. இரட்டையர் பிரிவில் 32 முறை வெற்றி பெற்ற சானியா, 15 முறை இறுதிப் போட்டி வரை சென்றிருக்கிறார்.

* அமெரிக்க வீராங்கனை பெத்தானி மாட்டேக் சேண்ட்ஸ் உடன் இணைந்து ஆஸ்திரேலியாவில், 'சிட்னி இண்டர்நேஷனல்' பட்டத்தை வென்றார்.

* ரோமில் நடந்த 'இத்தாலிய ஓப்பனில்' இறுதி வரை சென்றார்.

தான் வளர்ந்த ஊரான ஹைதராபாத்தில், ஒரு டென்னிஸ் அகாடமியைத் தொடங்கியிருக்கிறார் சானியா. அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெறும் பெடரேஷன் கோப்பைக்கான இந்திய டென்னிஸ் அணியின் கேப்டனாகி இருக்கிறார். தெற்கு ஆசிய போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலும் பெண்கள் பிரிவுக்கு தலைமை ஏற்கவுள்ளார் சானியா.

கடந்த ஏப்ரலில் உலக அளவில் பெண்கள் இரட்டையரில் முதலிடம் பிடித்து, இப்போது வரை அதைத்தக்க வைத்திருக்கிறார் சானியா. அடுத்த வருடமும் இதே இடத்தில் இருக்கத் தொடர்ந்து போராடுவேன் என்று நம்பிக்கை தெறிக்க ஒலிக்கிறது 'இந்தியாவின் மகள்' குரல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x