

ஐபிஎல் ஏலத்தில் தோனியை ரூ.12.5 கோடிக்கு புனே அணியும், அதே தொகைக்கு ரெய்னாவை ராஜ்கோட் அணியும் ஏலம் எடுத்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த இருவரும் தற்போது எதிர் எதிர் அணியில் களமிறங்க உள்ளனர்.
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ் தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் டி20 தொடரில் இரு ஆண்டுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் தேர்வாகின.
புனே அணியை ரூ.16 கோடிக்கு நியூ ரைஸிங் நிறுவனமும், ராஜ்கோட் அணியை ரூ.10 கோடிக்கு இண்டெக்ஸ் செல்போன் நிறுவனமும் ஏலத்தில் எடுத்தன. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கான வீரர்கள் ஏலம் நேற்று மும்பை கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
சென்னை, ராஜஸ்தான் அணிக்காக ஆடிய வீரர்கள் 50 பேர் ஏல பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இதில் இருந்து முதல்கட்டமாக புனே, ராஜ்கோட் அணிகளின் உரிமையாளர்கள் தலா 5 வீரர்களை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஏலத்தில் முதல் வீரரை தேர்வு செய்யும் உரிமை புனே அணிக்கு வழங்கப்பட்டது. முதல் வீரராக அந்த அணி தோனியை ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. ராஜ்கோட் அணி ரெய்னாவை ரூ.12.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
மேலும் அஜிங்க்ய ரஹானேவை ரூ.9.5 கோடிக்கும், அஸ்வினை ரூ.7.5 கோடிக்கும், ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.5.5 கோடிக்கும், டுபிளெஸ் ஸியை ரூ.4 கோடிக்கும் புனே அணி ஏலம் எடுத்தது. ராஜ்கோட் அணி ரவீந்திர ஜடேஜாவை ரூ.9.5 கோடிக்கும், மெக்குலத்தை ரூ.7.5 கோடிக்கும், ஜேம்ஸ் பால்க்னரை ரூ.5.5 கோடிக்கும், வெயின் பிராவோவை ரூ.4 கோடிக்கும் ஏலம் எடுத்தது.
எதிர் எதிர் அணியில்
கடந்த 8 ஆண்டுகளாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் ஒன்றாக விளையாடிய தோனி, ரெய்னா ஆகி யோர் முதன் முறையாக எதிர் எதிர் அணியில் களமிறங்குகின்றனர். உள்ளூர் ஆடுகளங்களில் மெது வாகவே ஆடுவார் என தோனியால் விமர்சிக்கப்பட்ட ரஹானே இம்முறை அவரது அணியிலேயே இடம் பிடித்துள்ளார்.
இரு அணிகளும் ரூ.40 கோடி முதல் ரூ.66 கோடிக்குள் அணிக்கு தேவையான மொத்த வீரர்களையும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என ஏற் கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த ஏலத்தில் இரு அணிகளும் தலா ரூ.39 கோடிக்கு வீரர்களை ஏலம் எடுத்துள்ளன. இதனால் மீதமுள்ள ரூ.27 கோடிக்கு எஞ்சிய வீரர்களை இரு அணிகளும் பிப்ரவரி 6-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் ஏலத்தில் தேர்வு செய்யும்.
வாட்சன் உள்ளிட்ட 40 வீரர்கள் நேற்றைய ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. விலை போகாத இவர்கள் பிப்ரவரி 6-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் 2-வது கட்ட தேர்வில் ஏலம் விடப்படுவார்கள். ஐபிஎல் டி20 தொடரின் 9-வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-பிடிஐ
ஏலம் போகாத வீரர்கள்
இந்திய வீரர்கள்:
ஸ்டூவர்ட் பின்னி, குல்கர்னி, அபிஷேக் நாயர், ஆஷிஷ் நெஹ்ரா, இர்பான் பதான், சஞ்சு சாம்சன், மோஹித் சர்மா, ராகுல் சர்மா, பாபா அபராஜித், ஆங்குஷ் பெயின்ஸ், ரஜத் பாட்டியா, ஏகலவ்யா திவேதி, தீபக் ஹூடா, விக்ரம்ஜித் மாலிக், மிதுன் மன்ஹாஸ், ரோனித் மோரே, கருண் நாயர், பவன் நேகி, ஈஸ்வர் சந்திர பாண்டே, பிரதீப் சாகு, தினேஷ் சலூன்கே, பரிந்தர் சிங் சரண், அங்கித் நாகேந்திர ஷர்மா, பிரதியூஸ் சிங் பிரவீன், ராகுல் டிவாடியா, சாகர் விஜய் திரிவேதி, திஷாந்த யாக்னிக்.
வெளிநாட்டு வீரர்கள்:
கைல் அபாட், கிறிஸ்டோபர் மோரிஸ், ஜுவான் தெரோன் (தென் ஆப்ரிக்கா), சாமுவேல் பத்ரி, பிராவோ, டுவைன் ஸ்மித் (மேற்கிந்தியத் தீவுகள்), வாட்சன், பென் கட்டிங், மைக்கேல் ஹசி, ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை (ஆஸ்திரேலியா), மாட் ஹென்றி , டிம் சவுதி (நியூசிலாந்து).