தோனி 37 ரன்கள்: ரயில்வேயை வீழ்த்தியது ஜார்கண்ட்

தோனி 37 ரன்கள்: ரயில்வேயை வீழ்த்தியது ஜார்கண்ட்
Updated on
1 min read

இந்திய ஒருநாள் கேப்டன் தோனி ரயில்வே அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டியில் 30 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்ய ஜார்கண்ட் அணி ரயில்வே அணியை 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

வியாழனன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் 33-வது ஓவரில் ஜார்கண்ட் அணி 122/3 என்று இருந்த நிலையில் களமிறங்கிய தோனி அதிகபட்ச ஸ்கோரை எடுத்த சவுரவ் திவாரியுடன் (66 பந்துகளில் 49 ரன்கள்), சேர்ந்து 38 ரன்களை இருவரும் சேர்த்தனர். இதனால் ஜார்கண்ட் அணி 45 ஓவர்கள் போட்டியில் 211/5 என்று முடிந்தது.

தோனி தன் இன்னிங்சில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்தார். கேப்டன் குமார் தியோபிராட் 53 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 38 ரன்கள் எடுத்தார். ரயில்வே தரப்பில் அவினாஷ் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய ரயில்வேஸ் அணி ஜார்கண்ட் பவுலர் சோனு சிங் (15/4) பந்து வீச்சில் 96 ரன்களுக்கு 37 ஓவர்களில் சுருண்டது. ஷாபாஸ் நதீம், அங்கீர் தாபாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன் மூலம் ஜார்கண்ட் 4 புள்ளிகள் பெற்று பிரிவு பி-யில் 20 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. பிரிவு ஏ-யில் தமிழ்நாடு அணியும், பிரிவு சி-யில் விதர்பாவும், பிரிவு டி-யில் உத்தரப்பிரதேச அணியும் முதலிடம் வகிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in